ஓய்வூதியத் திட்டத்துக்கான இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

2 mins read
15cc9f88-d08a-49a3-ae7c-fec2e7de946f
படம்: - hdfclife.com / இணையம்

சென்னை: தமிழகத்தில் 2003ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசாங்கத்தின் உத்தரவின்படி பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ளது.

தமிழகத்தில் அத்திட்டம், திமுக ஆட்சிக்கு வந்ததும் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து, சிறந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வு செய்வதற்கு, ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் மூன்று அதிகாரிகளைக் கொண்ட குழு கடந்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. இக்குழுவினர், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டது.

ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக 194 அரசு ஊழியர்கள் சங்கங்களிடம் ஒன்பது சுற்றுகளாக கருத்துகள் சேகரிக்கப்பட்டன. இந்நிலையில், இடைக்கால அறிக்கையை அக்குழுவினர் அரசிடம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 30) சமர்பித்தனர்.

அரசு ஊழியர்கள் சங்கங்கள், எல்ஐசி, மற்றும் பல்வேறு நிதி நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது; சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள், தகவல்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசு தொடர்புடைய நிதி நிறுவனங்கள், எல்ஐசியுடன் மேலும் ஆலோசனை நடத்த வேண்டியிருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. எனவே, குழு அதன் பணியை இறுதி செய்து அறிக்கையைத் தாக்கல் செய்வதற்குக் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டங்களை மேற்கொண்டபின், இறுதி அறிக்கை விரைவில் அரசிடம் வழங்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஓய்வூதியக் குழுவின் இடைக்கால அறிக்கைக்கு தமிழகத் தலைமைச் செயலகச் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கால நீட்டிப்பு என்பதை நேரடியாகப் பெறாமல் இப்படி மறைமுகமாக பெறுவதை ஏற்க இயலாது. ஓய்வூதியக் குழு தன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது,” என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்