இந்தியா, அமெரிக்கா இடையே கடலடி கம்பிவடத் தடத் திட்டம்

இந்தியா, அமெரிக்கா இடையே கடலடி கம்பிவடத் தடத் திட்டம்

2 mins read
e931b3fd-ede0-4bc7-b6fe-318f24960849
புதுடெல்லியில் பிரதமர் மோடி, கூகல் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஆகிய இருவரும் சந்தித்தனர். - படம்: பிடிஐ
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா இடையே செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வழியிலான இணைப்பை அதிகரிக்க, புதிய கடலடி கம்பி வடத்தடத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘அமெரிக்கா-இந்தியா கனெக்ட்’ என்ற கூட்டு உள்கட்டமைப்புத் திட்டத்தின்வழி, விசாகப்பட்டினத்தில் ஒரு புதிய அனைத்துலக கடல்சார் நுழைவாயில் நிறுவப்படும் என்று கூகல் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. நான்கு ‘ஃபைபர்-ஆப்டிக்’ வழித்தடங்களும் நிறுவப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் 20 மில்லியன் புதிய ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்தல், 11 மில்லியன் மாணவர்களுக்கு ஏஐ சார்ந்த ஆதரவு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து கூகல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெறும் ஏஐ உச்சநிலை மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அவர்‌ பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அண்மையில் அறிவிக்கப்பட்ட 15 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏஐ மையத்தில், அனைத்துலக கடலடி கம்பி வடத்தட இணைப்பும் ஒரு கிகாவாட் அளவிலான கணிணி வசதியையும் கொண்டிருக்கும் என்றார்.

முன்னதாக, பிரதமர் மோடியைச் சந்தித்தபோது, இந்தியாவில் அனைத்து தளங்களிலும் ஏஐ தொழில்நுட்பத்தைப் புகுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சுந்தர் பிச்சை கூறினார்.

இதன்மூலம் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளை மேம்படுத்துவது, அனைத்து மொழிகளிலும் தகவல்களை அணுகுவதற்கான வழிமுறைகளை விரிவுபடுத்துவது, புதுத்தொழில் நிறுவனங்களை ஆதரித்தல் ஆகியவை குறித்து பிரதமர் மோடியுடன் தாம் விவாதித்ததாக தமது எக்ஸ் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித வாழ்வில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மிகப் பெரிய மாற்றமாக உருவாகியுள்ளது என்றும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, மனித வாழ்க்கை மேம்படுத்தப் பயன்படும் கருவிகளில் ஒன்றாக ‘ஏஐ’ உருவெடுத்துள்ளது என்றும் பிரதமர் மோடி தமது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளைப் பொருத்தவரை 18 மொழிகளில், 800 மாவட்டங்களில் புதிய ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க கூகல் திட்டமிட்டுள்ளது.

மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், 11 மில்லியன் மாணவர்களுக்கு ‘ஏஐ’ துறையில் ஆக்கபூர்வமான உதவி வழங்கப்படும் என்றும் இதில் ‘ஏஐ’ ஆய்வுகளுக்கான ஆதரவும் அடங்கும் என்றும் கூகல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்