கூரையேறி வீட்டிற்குள் குதித்து பெண்ணைச் சீரழித்த காவல்துறை அதிகாரி

2 mins read
6395bfe2-ec70-4923-95fd-8fcad039353a
சந்தீப்பைத் தூணில் கட்டிப்போட்டு, ஊரார் நையப் புடைத்தனர். - படங்கள்: இந்திய ஊடகம்

ஆக்ரா: காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர் வீடு புகுந்து இளம்பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

பொய் வழக்கில் அந்த 20 வயதுப் பெண்ணின் தந்தையைச் சிறையில் தள்ளிவிடுவதாக மிரட்டி, அவ்வதிகாரி அப்பெண்ணைச் சீரழித்ததாகக் கூறப்படுகிறது.

பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு அவருடைய குடும்பத்தினரும் ஊர்க்காரர்களும் திரண்டனர். அதனைக் கண்டு அங்கிருந்து தப்பிக்க முயன்ற சந்தீப்குமார், 34, என்ற அந்த அதிகாரி ஊர்மக்களிடம் மாட்டிக்கொண்டார்.

உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில், சந்தீப்பைத் தூணில் கட்டிப்போட்டு, கிராமவாசிகள் அவரை அடித்து உதைக்கும் காணொளி சமூக ஊடகத்தில் வலம் வருகிறது.

பின்னர் அவர் ஆக்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காணொளிகள் பரவியதை அடுத்து, காவல்துறை ஆணையர் பிரீத்திந்தர் சிங், சந்தீப்பைப் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

“கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இன்னொரு காவலருடன் சேர்ந்து, அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்றார் சந்தீப்.

“கதவைத் தட்டிய சந்தீப், விசாரணை தொடர்பில் அப்பெண்ணின் தந்தையைத் தாங்கள் காண விரும்புவதாகக் கூறினார்.

“ஆனால், சந்தேகப்பட்ட அப்பெண் கதவைத் திறக்க மறுத்துவிட்டார். பின்னர் கூரை மீதேறி, வீட்டிற்குள் குதித்து, சந்தீப் அப்பெண்ணைச் சீரழித்துவிட்டார்,” என்று காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, காவல் நிலையத்தின்முன் திரண்ட உள்ளூர்வாசிகள், அங்கு பணியாற்றும் அனைவரையும் பணியிடைநீக்கம் செய்ய வலியுறுத்தி, போராட்டம் நடத்தினர்.

சந்தீப் குமார் நாள்தோறும் சுற்றுக்காவலுக்குத் தங்கள் ஊருக்கு வருவார் என்று அப்பெண்ணின் குடும்பத்தினர் கூறினர்.

கடந்த இரு மாதங்களாக அவர் தங்கள் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை தந்ததாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

“அதனை நாங்கள் எதிர்த்தபோது, எங்கள்மீது பொய் வழக்கு போடுவேன் என்று அவர் மிரட்டினார்,” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஊர்க்காரர்களிடம் பிடிபட்டபோது சந்தீப் குடிபோதையில் இருந்ததாகச் சொல்லப்பட்டது.

குறிப்புச் சொற்கள்