பத்லாப்பூரில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை; கொந்தளித்த மக்கள்

பத்லாப்பூரில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை; கொந்தளித்த மக்கள்

2 mins read
5e559c99-6843-4175-bec5-6721b9defcf4
ரயில் தண்டவாளத்தில் இறங்கி ரயிலை மறித்துப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திலுள்ள பத்லாப்பூரில் இரண்டு பள்ளிச் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதால் அவ்வட்டார மக்கள் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நான்கு வயது என்று இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. 

போராட்டம் தீவிரமடைந்ததால் அங்கு புதன்கிழமையன்று இணைய சேவை முடக்கப்பட்டது. பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறுமிகள் படித்த பள்ளியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக விசாரணையில்  தெரியவந்துள்ளது. 

பள்ளியின் கழிவறையில் தூய்மைப் பணியாளர் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 17ஆம் தேதி புகார் பதிவானது என்றும் அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. 

இதை அறிந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பத்லாப்பூர் ரயில் நிலையத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பலர் ரயில் தண்டவாளத்தில் இறங்கி ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். பத்லாபூரின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டங்களில் 17 காவல்துறையினர், 8 ரயில்வே ஊழியர்கள் காயமடைந்தனர்.

இந்தப் போராட்டம் தொடர்பாக 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டாரத்தில் அமைதி ஏற்படுத்த காவல்துறை அதிகாரிகள் கூடுதலாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

இணைய சேவை முடக்கம்

இதுகுறித்து அவ்வட்டார ‘டிசிபி’ சுதாகர் பதரே கூறுகையில், “வன்முறை மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களின் காரணமாக நகரில் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. நிலைமையை ஆராய்ந்து அதன் பின்பு படிப்படியாக சேவை திரும்ப வழங்கப்படும்” என்றார்.

“ காயமடைந்த அதிகாரிகள் உள்ளூரின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தடை உத்தரவை மீறுதல், சட்டவிரோதமாக ஆயுதங்களுடன் கூடுதல், பொதுச் சொத்துகளைத் தாக்கி சேதப்படுத்துதல் உள்ளிட்டவைகள் தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கல்வீச்சு உள்ளிட்ட இதர குற்றங்கள் தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மற்றவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது” என்று பத்லாப்பூர் காவல்துறை தெரிவித்தது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர், பெண் உதவியாளர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. அதேபோல், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் வழக்கை விசாரிக்கும் பணியில் தவறியதாக மூத்த காவல் ஆய்வாளர் உட்பட மூன்று காவல்துறை அதிகாரிகளை மாநில அரசு செவ்வாய்க்கிழமை பணிநீக்கம் செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்