ரூ.1000 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்பு: ஊடகவியலாளர் உட்பட 14 பேர் கைது

ரூ.1000 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்பு: ஊடகவியலாளர் உட்பட 14 பேர் கைது

1 mins read
91b715ac-fc7a-4b96-aeb7-21aa6408d87e
தொலைக்காட்சி செய்தியாளர் அவ்னீஷ் தீக்‌ஷித் உட்பட 14 பேர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) கைது செய்யப்பட்டனர். - மாதிரி படம்: இணையம்
Google News Preferred Icon

ரூ.1,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்ததாக ஊடகவியலாளர் உட்பட 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசம், கான்பூர் வருவாய் அதிகாரி, நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ள சாமுவேல் குருதேவ் சிங் ஆகியோர் புகாரளித்ததைத் தொடர்ந்து நில அபகரிப்பில் ஈடுபட்ட தொலைக்காட்சி செய்தியாளர் அவ்னீஷ் தீக்‌ஷித் உட்பட 14 பேர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் மீது 10 குற்றவியல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீக்‌ஷித் உள்பட 30க்கும் மேற்பட்டவர்கள் ரூ.1,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள 7,500 சதுர மீட்டர் நிலங்களை அபகரித்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீதிபதி ராகேஷ் குமார் சிங் தெரிவித்தார். அந்த நிலங்களில் இருந்த அறைகளின் பூட்டுகளை உடைத்த தீக்‌ஷித்தும் அவரது ஆட்களும் தங்களது சொந்தப் பூட்டுகளைப் போட்டுள்ளனர்.

அந்த அரசு நிலம் குத்தகைக்கு விடப்பட்டிருந்ததையும், குத்தகைக் காலம் முடிவடைந்ததையும் வருவாய்த் துறையினர் பின்னர் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 1884ஆம் ஆண்டு 99 ஆண்டுகால குத்தகைக்கு விடப்பட்டிருந்த நிலம், பின்னர் 25 ஆண்டுகளுக்கு குத்தகைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், குத்தகைக் காலம் எப்போதோ முடிந்த நிலையில் தற்போது நிலத்தை அபகரித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கொட்வாலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் காவல் ஆணையர் ஹரிஷ் சந்திரா தெரிவித்தார். மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்