மண்ணுக்குள் புதைந்துகிடந்த குடத்தில் தங்கப் புதையல்

மண்ணுக்குள் புதைந்துகிடந்த குடத்தில் தங்கப் புதையல்

1 mins read
7e13da8f-d11e-40ee-a347-b591a9cb77c5
பானையில் இருந்த தங்கப் புதையலில் 17 முத்து மணிகள், 13 தங்கப் பதக்கங்கள், 4 காசிமணி மாலை, 2 கம்மல், மோதிரம், வெள்ளி நாணயங்கள் இருந்தன.  - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

கண்ணூர்: கேரள மாநிலத்தில் ரப்பர் தோட்டத்தில் வேலை பார்த்த ஊழியர்களுக்கு தங்கப் புதையல் ஒன்று கிடைத்துள்ளது. அதில் 17 முத்து மணிகள், 13 தங்கப் பதக்கங்கள், 4 காசிமணி மாலை, 2 கம்மல், மோதிரம், வெள்ளி நாணயங்கள் உள்ளிட்டவை இருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

புதையல் கிடைத்துள்ள தகவலறிந்து அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்கள் அதனை நேரில் காண ஆவலுடன் திரண்டனர்.

இதைத்தொடர்ந்து கண்ணூர் மாநகரக் காவலர்கள் புதையல் பொருள்களை வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இப்போது அவை அனைத்தும் தளிப்பரம்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலத்தின் கண்ணூர் நகரருகே உள்ள செங்காலா பகுதியில் தனியார் ரப்பர் தோட்டம் ஒன்று உள்ளது.

இங்கு மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைப்பதற்காக 10 அடி ஆழத்திற்கு ஊழியர்கள் குழி தோண்டிக்கொண்டிருந்தபோது, குடம் ஒன்று தென்பட்டுள்ளது.

அதனை வெளியே எடுத்த ஊழியர்களுக்குத் திறந்து பார்க்க மனம் வரவில்லை. அதற்குள் வெடிகுண்டு இருக்கலாம் என்ற அச்சம்தான் அதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கண்ணூர் காவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. குடத்தைச் சோதித்த காவலர்கள் அதில் வெடிகுண்டு இல்லை என்பதை உறுதிசெய்தனர்.

பின்னர், குடத்தை உடைத்துப் பார்த்தபோது அதற்குள் பொன், மணி, முத்து என புதையல் இருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த தொல்லியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
தங்கம்கேரளாகாவலர்கள்