புதுடெல்லி: இந்த ஆண்டு நடைபெற்ற மருத்துவ உயர்கல்விக்கான ‘நீட்’ என்றழைக்கப்படும் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத் பகுதியில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2024 நீட் நுழைவுத் தேர்வில் குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது நாடு முழுதும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தேர்வை நடத்திய தேசிய தேர்வு ஆணையம் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் அழுத்தமும் அதிகரித்துள்ளது. முறைகேடுகள் நடக்கக் காரணமாக இருந்த தேர்வு ஆணையத்தைக் கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
முன்னதாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஹஸாரிபாக் பகுதியில் பள்ளி முதல்வர் இஷான் உல் ஹக் என்பவரும் அவருடன் பணிபுரியும் துணை முதல்வர் இம்தியாஸ் அலாம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
‘இளநிலை நீட் நுழைவுத் தேர்வு - 2024’ முறைகேடு தொடர்பாக பல்வேறு வழக்குகளை மத்திய புலனாய்வுத்துறை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கருணை அடிப்படையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் கடந்த ஜூன் மாதம் ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் 8ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிகிறது.

