சிறையில் உள்ள பொறியாளர் ரஷீத் எம்.பி.யாக பதவியேற்க என்ஐஏ அனுமதி

சிறையில் உள்ள பொறியாளர் ரஷீத் எம்.பி.யாக பதவியேற்க என்ஐஏ அனுமதி

2 mins read
1654cea5-4c92-4820-84ce-44ab60e72b63
பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் சிறையில் உள்ள பொறியாளர் ரஷீத் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டுவரும் அவாமி இத்தேஹாத் கட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரஷீத் என்ற பொறியாளர் (வயது 56). இவர் 2004 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் லாங்கேட் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பின்னர், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அவர் அதில் தோல்வியடைந்தார்.

இதற்கிடையே, பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் 2019ஆம் ஆண்டு பொறியாளர் ரஷீத்தை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்தது. கைது செய்யப்பட்ட ரஷீத் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதேவேளை, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பொறியாளர் ரஷீத் காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சையாக சிறையில் இருந்தவாறே போட்டியிட்டார். அவருக்கான தேர்தல் பிரசாரப் பணிகளை அவரது மகன்கள் அப்ரர் ரஷீத், அஸ்ரத் ரஷீத் மேற்கொண்டனர். நாடாளுமன்றத் தேர்தலில் பாரமுல்லா தொகுதியில் பொறியாளர் ரஷீத் வெற்றிபெற்றார். தேர்தலில் வெற்றிபெற்றபோதும் பயங்கரவாத வழக்கில் சிறையில் உள்ள ரஷீத் இதுவரை எம்.பி.யாக பதவியேற்கவில்லை.

இதையடுத்து, எம்.பி.யாக பதவியேற்க தனக்கு பிணை வழங்கும்படி பொறியாளர் ரஷீத் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் என்ஐஏ பதில் அளிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், சிறையில் உள்ள பொறியாளர் ரஷீத் எம்.பி.யாக பதவியேற்க அனுமதிப்பதாக டெல்லி நீதிமன்றத்தில் என்ஐஏ தெரிவித்துள்ளது. அதேவேளை, பதவியேற்பு நடைமுறைகளை ஒரேநாளில் முடிக்க வேண்டும் எனவும், இந்த நடைமுறையின்போது பொறியாளர் ரஷீத் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கக்கூடாது என்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் என்ஐஏ தெரிவித்துள்ளது.

என்ஐஏ பதில்மனு தாக்கல் செய்துள்ள நிலையில், பொறியாளர் ரஷீத்தின் பிணை மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்