புதுடெல்லி: இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்றிய பிறகு அக்னிபாத் திட்டம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசட்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்தார். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
ஏற்கெனவே 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதி கடைசி மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி ஹரியானாவில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது, ‘‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடி கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் வீசுவோம்.
இத்திட்டத்தை பிரதமர் அலுவலகம் உருவாக்கியதே தவிர, ராணுவம் அல்ல. முதல்முறையாக இந்திய ராணுவ வீரர்களை தொழிலாளர்களாக மோடி மாற்றியுள்ளார். இந்தத் திட்டத்தால் ராணுவ வீரர்கள் பாதிக்கப்படுவர்’’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இதற்குப் பதிலடி தரும் விதமாக மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் மே 28ஆம் தேதி கூறும்போது, “ராகுல் காந்தி முதலில் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்றட்டும். அதன் பின்னர் அவர் அக்னிபாத் திட்டம் குறித்து பேசலாம்.
ராணுவம் குறித்து தெரியாத ஒருவர் இதுகுறித்து பேசுவது சரியானது அல்ல” என்றார். மத்திய இணை அமைச்சரான வி.கே.சிங், ராணுவத்தில் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தின் மூலம் நாட்டின் பாதுகாப்பில் மோடி அரசு விளையாடிக்கொண்டிருக்கிறது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “இந்தத் திட்டம் தொடர்பாக எங்களிடம் மூன்று கேள்விகள் உள்ளன என்றார்.
“அக்னிபாத் திட்டத்தால் ராணுவத்தில் புதிய ஆட்சேர்ப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்திலிருந்து 46 ஆயிரமாக குறைந்துள்ளதா, இல்லையா?
தொடர்புடைய செய்திகள்
“அக்னி வீரர் திட்டத்தை மறுபரிசீலனை செய்து மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரும்ப திரும்ப சொல்லிவருவது உண்மையா, இல்லையா?
“ராணுவத்தில் புதிய வீரர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து ராணுவ விவகாரத் துறை கவலையோடு இருப்பது உண்மையா, இல்லையா? எனக் கேள்வி எழுப்பினார் கார்கே.
மேலும், இந்திய எல்லைப் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. இந்தச் சூழலை எதிர்கொள்ள ராணுவத்தில் அதிக வீரர்கள் தேவை. ஆனால், மோடி அரசு ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டம் ரத்து செய்யப்படும்” என்றார் கார்கே.


