திருச்சி: முசிறி டி.எஸ்.பி. யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அந்த வழக்கு தொடர்பாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவல்துறை அதிகாரிகள் கோவைக்குச் சென்றனர். அங்கிருந்து சவுக்கு சங்கரை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயபிரதா முன்பு முன்னிலைப்படுத்த அழைத்துச் சென்றனர்.
காவல்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் அவதூறாகப் பேசியதால் அவரை திருச்சிக்கு அழைத்துச்செல்லும் காவல் வாகனத்தில் காவலுக்காக பெண் காவலர்கள் மட்டுமே உடன் சென்றனர்.
இதனையடுத்து நீதிபதி ஜெயபிரதா முன்பு சவுக்கு சங்கர் முன்னிலைப்[Ϟ]படுத்தப்[Ϟ]பட்டார். அப்போது, கோவையில் இருந்து அழைத்து வரப்பட்டபோது, பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாகவும் அதனை காணொளியாகப் பதிவு செய்து காவல்துறையை சேர்ந்த வாட்சப் குழுக்களுக்கு அனுப்பியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், பெண் காவலர்களின் விரல் கூட சவுக்கு சங்கர் மீது படவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கரின் கையை ஸ்கேன் செய்து வர நீதிபதி ஜெயபிரதா அறிவுறுத்தினார்.
பெண் காவலர்கள் பற்றியும் பெண் காவல்துறை அதிகாரி பற்றியும் சவுக்கு சங்கர் அவதூறான கருத்துகளை யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாக புகார் எழுந்தது.
கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் இது குறித்து கோயம்புத்தூர் இணையக் குற்றத் தடுப்புக் காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார். அதையடுத்து தொடர்ச்சியாக ஏராளமான காவல்துறை பெண் அதிகாரிகளும் பெண் காவலர்களும் அவர் மீது புகார் கொடுத்துள்ளனர். மேலும் அவர் வாகனத்தில் கஞ்சா வைத்திருந்ததாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை சென்னை காவல்துறை ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் பிறப்பித்தார்.

