வாக்கு வங்கி அரசியல் குறித்து மட்டுமே காங்கிரஸ் சிந்திக்கிறது: மோடி

வாக்கு வங்கி அரசியல் குறித்து மட்டுமே காங்கிரஸ் சிந்திக்கிறது: மோடி

2 mins read
ac2997d1-6f66-4911-8373-ee742addf2a9
கர்நாடகாவின் பெலகாவி உள்ளிட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

பெங்களூரு: காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியல் குறித்து மட்டுமே சிந்திக்கிறது, மக்கள் நலனில் அது கவனம் செலுத்தவில்லை என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்துள்ளார்.

கர்நாடகாவின் பெலகாவி உள்ளிட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அந்தக் கருத்தை அவர் தெரிவித்தார்.

“கொரோனா பெருந்தொற்று காலத்தில் உள்நாட்டிலேயே மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, நாடு முழுவதும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது தடுப்பூசி குறித்து எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பின. இந்தியாவின் சாதனைகளை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விரும்பவில்லை. வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செல்லும் காங்கிரஸ் தலைவர்கள், இந்தியாவின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பேசுகின்றனர்,” என்று மோடி கூறினார்.

“கர்நாடகாவின் ஹூப்ளியில் கடந்த 18ஆம் தேதி நேஹா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் நீதி கேட்டு போராடி வருகின்றனர். ஆனால், கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு, இதுகுறித்து துளியும் கவலைப்படவில்லை. வாக்கு வங்கி அரசியல் குறித்து மட்டுமே சிந்திக்கிறது,” என மோடி குற்றஞ்சாட்டினார்.

“இந்து அரசர்களை, சர்வாதிகாரிகள் என்று அவதூறாகப் பேசி உள்ளார் ராகுல் காந்தி. மக்களின் நிலங்களை இந்து மன்னர்கள் அபகரித்ததாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். சத்ரபதி சிவாஜி, ராணி சின்னம்மா உள்ளிட்ட பல்வேறு இந்து மன்னர்களை அவர் அவமதித்து உள்ளார். முகலாய மன்னர்கள் செய்த குற்றங்கள் தொடர்பாக ராகுல் பேசவில்லை,” என்றார் மோடி.

“இந்தியாவில் பாஜக, கடந்த 10 ஆண்டு காலம் நல்லாட்சியை வழங்கியுள்ளது. பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. ஆனால், வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ், மக்களின் சொத்துக்களை அபகரிக்கும். காங்கிரஸின் அனைத்து சதி திட்டங்களையும் பாஜக முறியடிக்கும்,” என மோடி வாக்கு சேகரிப்பின் போது பேசினார்.

குறிப்புச் சொற்கள்