டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்வீந்தர் சிங் பதவி விலகல்

டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்வீந்தர் சிங் பதவி விலகல்

2 mins read
8e6023ae-53e2-4343-9fea-8d6999a54917
அர்வீந்தர் சிங் லவ்லி  - படம்: ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்வீந்தர் சிங் லவ்லி தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். அர்வீந்தர், பதவி விலகல் கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பி உள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்ததை எதிர்த்து தாம் பதவி விலகியதாக அர்வீந்தர் தெரிவித்துள்ளார்.

“டெல்லி காங்கிரஸ் கட்சியானது ஆம் ஆத்மி கட்சியுடன் நாடாளுமன்றத் தேர்தலுக்காக கூட்டணி வைத்ததில் விருப்பமில்லை. காங்கிரஸ் கட்சி மீது போலியான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி ஆம் ஆத்மி. அப்படியிருந்தும் கூட அத்தகைய கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் முடிவு செய்தது. டெல்லி காங்கிரசில் நான் உட்பட சில மூத்த தலைவர்கள் இதனைக் கடுமையாக எதிர்த்தோம். எங்கள் அனைவரின் கோரிக்கைகளையும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் நிராகரித்துவிட்டனர். தம்மையோ அல்லது டெல்லியில் உள்ள மூத்த தலைவர்களையோ முக்கியமான முடிவுகள் எடுக்க தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் அனுமதிப்பதில்லை,” என்று அர்வீந்தர் தமது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அர்வீந்தர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லி காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார்.

டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. அர்வீந்தர் பொறுப்பில் இருந்து விலகியது தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்வீந்தர் போல் மேலும் சில காங்கிரஸ் தலைவர்கள் அவர்களது பொறுப்பில் இருந்து விலகலாம் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்