மரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்

2 mins read
2ab45e77-fc89-4ad9-98cf-2a9c679fe1fa
மரத்தில் ஏறிநின்று போராட்டம் நடத்திய பெண்கள் வலுக்கட்டாயமாக கீழே இறக்கப்பட்டனர். - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

புதுடெல்லி: டெல்லியில் தமிழ்நாட்டு விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் இரண்டாவது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லி ஜந்தா் மந்தரில் நடைபெறும் போராட்டத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 24) திடீரென பெண்கள் உள்பட சிலர் கைப்பேசி கோபுரம் மீதும், மரத்தின் மீதும் ஏறி போராட்டம் நடத்தினர். சிலர் கயிறுடன் ஏறி நின்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளப் போவதாக அறிவித்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக டெல்லி காவல்துறை, துணை ராணுவப் படை வீரர்கள், கைப்பேசி கோபுரம், மரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தியவர்களை வலுக்கட்டாயமாகக் கீழே இறக்கினர்.

ஏற்கெனவே தேசிய தலைநகரம் டெல்லியின் எல்லைப்பகுதியில் பல மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் பல்வேறு கோரிக்கையுடன் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கமும் தங்களின் தரப்பு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர்.

பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் பங்கேற்றுள்ளனா்.

பல்வேறு வகையில் தமிழக விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதால், துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விவசாய விளை பொருள்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், கடன் தள்ளுபடி, ஓய்வூதியம், காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், மேகேதாதுவில் கா்நாடக அரசு அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில் ஒரு வார காலத்திற்கு இப்போராட்டத்தை நடத்த அவா்கள் திட்டமிட்டுள்ளனா்.

குறிப்புச் சொற்கள்