மேற்கு வங்க மாநிலத்தைச் சூறையாடிய புயலுக்கு ஐவர் உயிரிழப்பு; 100 பேர் படுகாயம்

மேற்கு வங்க மாநிலத்தைச் சூறையாடிய புயலுக்கு ஐவர் உயிரிழப்பு; 100 பேர் படுகாயம்

1 mins read
60e4d2b8-fa77-4e8c-892e-66942b21ad1e
புயலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பெண்ணுக்கு ஆறுதல் கூறிய முதல்வர் மம்தா பானர்ஜி. - படம்: எக்ஸ் தளம்
Google News Preferred Icon

ஜல்பைகுரி: மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த புயல் காற்றும் ஆலங்கட்டி மழையும் பெய்ததில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. ஒரு சில வீடுகள் தரைமட்டமாகி, மின் கம்பங்கள் சரிந்து, ஆங்காங்கே மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்தன.

இந்தப் பேரிடரில் ஒரு பெண் உள்பட ஐவர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது தேர்தல் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் ரத்துசெய்து விட்டு ஞாயிறு இரவு ஜல்பைகுரி மாவட்டத்துக்குச் சென்று புயலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதேபோல் ஜல்பைகுரி அருகே உள்ள அலியுபூர்துவார், கூச் பெஹார் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளையும் புயல் தாக்கியது.

இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி-மைனாகுரி பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் நலமடைய பிரார்த்திக்கிறேன்.

“தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு மாநிலப் பாஜகவின் அனைத்து தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜல்பைகுரியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநில ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் திங்கட்கிழமை பார்வையிட உள்ளதாக மேற்கு வங்க ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்