கல்புருகி: கர்நாடக மாநிலம், கல்புருகி பகுதியில் கந்துவட்டிப் பணம் தராததால் மீன் வியாபாரம் செய்யும் இளையர் மீது அமிலம் (ஆசிட்) வீசப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
ஜூபேர் அகமத் எனும் அந்த ஆடவர் தன் தொழிலுக்காக, அர்ஷாத் பர்வேஜ் என்பவரிடம் ஏறக்குறைய 35 லட்சம் ரூபாயைக் கடனாகப் பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
அதற்கு, வட்டி, மீட்டர் வட்டி எனக் கணக்கிட்டு, 90 லட்சம் ரூபாயாகத் திருப்பித் தரும்படி அர்ஷாத்தும் அவருடைய நண்பர்களும் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், அர்ஷாத்தின் நண்பரான இம்ரான் கான் என்பவர், பெட்ரோல் நிலையத்துக்கு அருகே நடந்துசென்ற ஜூபேரை வழிமறித்துத் தகராறு செய்தார்.
பின்னர், தான் மறைத்து வைத்திருந்த அமிலத்தை எடுத்து ஜுபேர் மீது வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
காயமடைந்த ஜுபேர் அகமத்தை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இம்ரான் கானைத் தேடிவருகின்றனர்.

