சிறையில் இருந்தபடி தண்ணீர் வழங்க கெஜ்ரிவால் உத்தரவு

சிறையில் இருந்தபடி தண்ணீர் வழங்க கெஜ்ரிவால் உத்தரவு

3 mins read
கெஜ்ரிவாலுக்கு எதிராக அரசுத் தரப்பு சாட்சியாக மாறுவேன்: சுகேஷ் சந்திரசேகர்
74f858c3-9340-4bf8-9a22-5945e1f0919a
சுகேஷ் சந்திரசேகர்.   - படம்: ஊடகம்
multi-img1 of 2
Google News Preferred Icon

புதுடெல்லி: டெல்லியில் வறட்சி நிலவும் பகுதிகளில் தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்கும்படி கைது செய்யப்பட்டு, மத்திய அமலாக்கத் துறையின் காவலில் இருந்து வரும் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியின் சில பகுதிகளில் நிலவும் குடிதண்ணீர், கழிவு நீர் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணும்படி முதல்வர் கெஜ்ரிவால் பிறப்பித்த முதல் உத்தரவு குறித்து அமைச்சர் அதிஷி கண்ணீர் மல்க செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

“சிறையில் இருக்கும் இந்த துயரமான நேரத்திலும் முதல்வர் மக்கள் மீது வைத்துள்ள அக்கறையை நினைக்கும்போது எனக்குக் கண் கலங்குகிறது.

“கோடை தொடங்குவதற்கு முன்பாக, தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதிகளுக்குப் போதுமான அளவுக்குத் தண்ணீர் லாரிகளை அனுப்பும்படி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

“இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படி கூறியுள்ளார். தேவைப்பட்டால் துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவின் உதவியை நாடுமாறும் அவர் அனைத்து உதவிகளையும் செய்வார் என்றும் கெஜ்ரிவால் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்,” என அமைச்சர் அதிஷி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

“தேவைப்பட்டால் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடி அரசை வழிநடத்துவார். அவரை பணி செய்யவிடாமல் தடுப்பதற்கு எந்த விதிமுறையும் இல்லை. அவர் குற்றவாளி என அறிவிக்கப்படவில்லை. அதனால், டெல்லி முதல்வராக அவர் தொடர்ந்து நீடிப்பார்,” என்று மேலும் அவர் கூறினார்.

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் முதல்வராக நீடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், கெஜ்ரிவால் அரசு நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கெஜ்ரிவாலுக்கு எதிராக மாறுவேன்

இதனிடையே, டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குத் தொடர்பில் கெஜ்ரிவாலுக்கு எதிராக அரசுத் தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறுவேன் என்று பல்வேறு மோசடி வழக்குகளில் கைதாகியுள்ள சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை டெல்லி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய சூழலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து சுகேஷ் செய்தியாளர்களிடம் கூறியபோது, “கெஜ்ரிவாலுக்கும் அவரது குழுவினருக்கும் எதிராக அரசுத் தரப்பு சாட்சியாக மாறப்போகிறேன். அவர்கள் அனைவரது முறைகேடுகளையும் அம்பலப்படுத்துவேன்.

“அவர்களுக்கு எதிரான அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்து உள்ளேன். உண்மை வென்றுள்ளது. திகார் சிறைக்கு கெஜ்ரிவாலை வரவேற்கிறேன்,” என்றார்.

புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குத் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வியாழக்கிழமை (மார்ச் 21) அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

வரும் 28ஆம் தேதி வரை அவரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், இந்தக் கைது நடவடிக்கைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்தது.

கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தலைநகர் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாகப் போராட்டம் தொடர்ந்தது.

வரும் 31ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் பேரணியை நடத்த இருப்பதாக ‘இண்டியா’ கூட்டணி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

குறிப்புச் சொற்கள்