மேனகா, வருணுக்கு வாய்ப்பில்லை

மேனகா, வருணுக்கு வாய்ப்பில்லை

2 mins read
da48af9b-eab1-4dfc-bb92-217693949616
மேனகா காந்தி, வருண் காந்தி - படம்: இணையம்
Google News Preferred Icon

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் எம்.பி.யான வருண் காந்திக்கும், சுல்தான்பூர் எம்.பி.யான அவரது தாய் மேனகா காந்திக்கும் பாஜக வாய்ப்பளிக்காது எனத் தெரிகிறது.

காங்கிரஸின் ராகுலுக்கு எதிராக பாஜகவில் அதிரடியாக களம் இறக்கப்பட்டவர் வருண் காந்தி, நேரு-காந்தி குடும்பத்தின் மற்றொரு வாரிசான இவர் பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகன். 2014ல் சுல்தான்பூர் எம்.பி.யான இவர், 2019ல் பிலிபித் தொகுதிக்கு மாறி எம்.பி. ஆனார். 2017 உ.பி. தேர்தலில் முதல்வர் வேட்பாளராவார் எனவும் பேசப்பட்டார்.

அங்கு யோகி ஆதித்யநாத் முதல்வரானது முதல் கட்சித் தலைமை மீது வருண் அதிருப்தி காட்டத் தொடங்கினார். 2022 உ.பி. தேர்தலுக்குப் பிறகு இந்த அதிருப்தி அதிகரித்தது. விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடி ஆட்சியை விமர்சனம் செய்து வந்தார்.

இதனால் பிலிபித்தில் வருணுக்கு பதிலாக உ.பி. அமைச்சர் ஜிதின் பிரசாத்திற்கு பாஜக வாய்ப்பு அளிக்க உள்ளது. இதனால் வருணின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.

இதனிடையே, சமாஜ்வாதி கட்சியில் வருண் இணைவார் எனக் கூறப்பட்டது. பிறகு அமேதியில் வருண் சுயேச்சையாக போட்டியிடுவார் எனவும் இவருக்கு சமாஜ்வாதியும் காங்கிரஸும் ஆதரவளிக்கும் எனவும் தகவல் பரவி வருகிறது.

வருணின் தாயான மேனகா காந்தி, 67, உ.பி.யின் சுல்தான்பூர் எம்.பி.யாக உள்ளார். இவருக்கும் பாஜக வாய்ப்பு அளிக்காது எனத் தெரிகிறது. உ.பி.யில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 55 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வருண், மேனகா,மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் உள்ளிட்டோரின் தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்
பாஜகநாடாளுமன்றத் தேர்தல்இந்தியாவருண் காந்தி