இந்திய ராணுவத்தை வெளியேற்றிய மாலத்தீவு சீனாவுடன் ராணுவ ஒப்பந்தம்

இந்திய ராணுவத்தை வெளியேற்றிய மாலத்தீவு சீனாவுடன் ராணுவ ஒப்பந்தம்

2 mins read
d4c7bcd9-bf12-4d5c-8d26-63f012ced464
பெய்ஜிங்கிற்கு 2024 ஜனவரி 10ஆம் தேதி வருகை மேற்கொண்ட மாலத் தீவு முகம்மது முய்சு-ஐ ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கும் சீன அதிபர் ஸி ஜின்பிங். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

மாலி: மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தின் முதல் குழுவை வெளியேற்றுவதற்கான கெடு இன்னும் ஐந்து நாள்களில் முடிய உள்ளது.

இந்நிலையில் சீனாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது மாலத்தீவு. அதன்படி மாலத்தீவுக்கு சீனாவின் இலவச ராணுவ உதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் மாலத்தீவு சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்தும் வகையிலான அந்த ஒப்பந்தத்தில், மாலத்தீவு பாதுகாப்புத்துறை அமைச்சர் முகமது காசன் மவுமூன், சீனாவின் அனைத்துலக ராணுவ ஒத்துழைப்பு அலுவலக துணை இயக்குநர் மேஜர் ஜெனரல் ஜாங் பாவ்கன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

இதனை மாலத்தீவு பாதுகாப்புத்துறை அமைச்சு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் குறித்த முக்கிய விவரங்களை அந்த அமைச்சு வெளியிடவில்லை.

முன்னதாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத 12 ஆம்புலன்ஸ்களை மாலத்தீவுக்கு சீன அரசாங்கம் பரிசாக வழங்கியுள்ளதாகவும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

மாலத்தீவில் உள்ள மூன்று விமானத் தளங்களை இந்திய ராணுவம் நிர்வகித்து வந்தது. அங்கு இந்திய ராணுவ வீரர்கள் 88 பேர் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு டோர்னியர் விமானத்தைப் பயன்படுத்தி, கடந்த சில ஆண்டுகளாக மாலத்தீவு மக்களுக்கு மருத்துவத் தேவைகளுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்கி வந்தனர்.

புதிய அதிபராக முய்சு பதவியேற்றபின் அவரின் முதல் வேலையாக இந்திய ராணுவத்தை வெளியேற்ற முடிவு செய்தார்.

இதுதொடர்பாக இரு தரப்பிலும் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்பின்னர் நாடாளுமன்றத்தில் பேசிய முய்சு, ஒரு விமானத் தளத்தில் இருந்து இந்திய வீரர்கள் 2024 மார்ச் 10ஆம் தேதிக்குள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும், மீதமுள்ள இரண்டு விமானத் தளங்களில் இருக்கும் வீரர்கள் 2024 மே 10ஆம் தேதிக்குள் அனுப்பப்படுவார்கள் என்றும் அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்