பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு: முதலீடுகளைத் தடுப்பதற்கு நடந்த சதியா என விசாரணை

பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு: முதலீடுகளைத் தடுப்பதற்கு நடந்த சதியா என விசாரணை

2 mins read
7abaf275-fb91-4dd9-9876-dbfcec03d659
குண்டுவெடிப்பு நிகழ்ந்த உணவகம். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

பெங்களூரு: பெங்களூர் உணவக குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளி பற்றி துப்பு துலங்கி இருப்பதாக கர்நாடக அமைச்சர் பரமேஷ்வர் தெரிவித்துள்ளார்.

முக்கியமான ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் குற்றவாளி விரைவில் பிடிபடுவது உறுதி என்றும் அவர் கூறியுள்ளார்.

குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, கர்நாடக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை தீவிர ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதால் காவல்துறை கண்காணிப்பும் விசாரணையும் தீவிரமடைந்துள்ளதாக பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த ‘ராமேசுவரம் கஃபே’ உணவகத்துக்கு 12 கிளைகள் இருப்பதாகவும் தொழில் போட்டி காரணமாக குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

பெங்களூரில் பல்வேறு திட்டங்களுக்காக முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ள நிலையில், வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கத்துடன் குண்டு வெடிப்பு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என மற்றொரு தரப்பினர் கூறுவதாக இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

மங்களூரில் நிகழ்ந்த ‘குக்கர்’ குண்டு வெடிப்புக்கும் அண்மைய சம்பவத்திற்கும் இடையே சில ஒற்றுமைகள் இருப்பது தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் பரமேஷ்வர், இந்தக் கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது என்றார்.

இதற்கிடையே, பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை வெளியிட்டதை அடுத்து, என்.ஐ.ஏ. தனது பங்குக்கு வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளது.

மதுரை, மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது. உணவக குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

குறிப்புச் சொற்கள்