புதுடெல்லி: அழகான கடற்கரையைக் கொண்ட லட்சத்தீவில் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அங்கு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ரூ.3,600 கோடி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
லட்சத்தீவு கேரள கடற்கரையிலிருந்து 220 கி.மீ. முதல் 440 கி.மீ. தூரம் வரை 36 தீவுகளாக 32 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு உள்ளது. அங்குள்ள ஆன்ட்ரோத், கல்பேனி, கடாமத் தீவுகளில் துறைமுக வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதற்கான நிதி, துறைமுகம் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து ஆகியவை மேம்படுத்தப்பட உள்ளன.
இதனால் உள்நாட்டுச் சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க லட்சத்தீவின் பிற தீவுகளிலும் சுற்றுலா கட்டமைப்புகளை மேம்படுத்த கவனம் செலுத்தப்படும் என இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பிப்ரவரி 2ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக லட்சத்தீவுக்குச் சென்றிருந்தார்.
பின்னர் தன்னுடைய பயண அனுபவத்தை எக்ஸ் ஊடகத்தில் திரு மோடி பகிர்ந்துகொண்டார்.
அவரது எக்ஸ் பதிவில் “அமைதியும் அழகும் நிறைந்த லட்சத்தீவு மனதை மயக்குவதாக உள்ளது. நீங்கள் சாகசத்தை விரும்பினால் உங்களின் பயணப் பட்டியலில் நிச்சயம் லட்சத்தீவு இடம்பெற வேண்டும்,” என்று பதிவிட்டிருந்தார்.
அது மட்டுமல்லாமல் கடற்கரையில் தான் மேற்கொண்ட நடைப் பயிற்சி, கடலுக்கு அடியில் நீந்தியது போன்ற புகைப்படங்களையும் பிரதமர் மோடி வெளியிட்டிருந்தார்.
அந்தப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதால் இணையத் தளத் தேடலில் லட்சத்தீவு முன்னிலை பெற்றது.
தொடர்புடைய செய்திகள்
மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் இந்தியாவின் முயற்சி இது என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டது. வழக்கமாக தங்கள் விடுமுறையை மாலத் தீவில் கழிக்கும் இந்தியர்கள் பலர் இப்போது லட்சத் தீவுக்குச் செல்லும் முனைப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியர்கள், மாலத்தீவுகளுக்கு செல்வதைத் தவிர்க்கவிருப்பதாகவும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

