உத்தராகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டம் தாக்கல்: காவலர்கள் குவிப்பு

உத்தராகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டம் தாக்கல்: காவலர்கள் குவிப்பு

2 mins read
aa854b94-2aae-48be-b826-9962ffa18d69
உத்தராகண்ட் சட்டப் பேரவை முன்பு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த காவலர்கள். - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

உத்தராகண்ட்: உத்தராகண்ட் சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) பொது சிவில் சட்ட மசோதா (யுசிசி) தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில், சட்டப்பேரவை முன்பு பாதுகாப்புக்காக அதிக அளவில் காவலர்கள் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

உத்தராகண்ட் சட்டப் பேரவையில் யுசிசி குறித்த விவாதமும் நடைபெற்றது.

யுசிசி மசோதாவை தாக்கல் செய்வதற்காக சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தை தள்ளுபடி செய்வதற்கான முடிவை எதிர்த்து சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடந்த திங்கட்கிழமை வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக யுசிசி மசோதா குறித்து அம்மாநில முதல்வர் புஷ்கர்சிங் தாமி கூறுகையில், “உத்தராகண்ட் மாநிலத்தில் மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாடும் யுசிசி மசோதாவுக்காகக் காத்திருந்தது. மாநில சட்டப்பேரவையில் யுசிசி மசோதா தாக்கல் செய்யப்படும் சூழலில் அவர்களது காத்திருப்பு ஒரு முடிவுக்கு வருகிறது.

“இந்த மசோதா எப்படி பேரவைக்கு கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுகிறது என்பதை ஒட்டுமொத்த நாடும் கவனித்துக்கொண்டுள்ளது,” என்றார்.

பொது சிவில் சட்டம்

பொது சிவில் சட்டம் (யுசிசி) என்பது திருமணம், மணமுறிவு, தத்தெடுப்பு, வாரிசுரிமை போன்றவற்றுடன் தொடர்புடையது. இவற்றின் தொடர்பில் தற்போது ஒவ்வொரு மதத்திலும் தனித் தனிச் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதற்குப் பதிலாக அனைவருக்கும் பொதுவான சட்ட நடைமுறையைக் கொண்டுவருவதே யுசிசி சட்டத்தின் நோக்கம்.

யுசிசி சட்டம் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பல்வேறு உரிமைகளுக்கும் எதிரானதாக அமைந்துவிடும் ஆபத்து உள்ளதாக எதிர்க்கட்சிகளும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்ட் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க சட்டப் பேரவை முன்பு ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்