பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்குக் கருக்கலைப்பு; நீதிமன்றம் கண்டனம்

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்குக் கருக்கலைப்பு; நீதிமன்றம் கண்டனம்

2 mins read
d1fce8e7-e839-4324-ba3f-2c853a0bac6a
படம்: - பிக்சாபே
Google News Preferred Icon

கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 27 வயது இளம்பெண்ணின் 23 வார கருவை உயர்நீதிமன்ற உத்தரவின்றி கலைத்த மாநில அரசுக்கும் கருக்கலைப்பில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில் அந்த இளம்பெண் கர்ப்பம் அடைந்தார்.

அந்தப் பெண் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தான் கருத்தரித்திருந்தது 21 வாரங்களுக்குப் பின்பே அவருக்குத் தெரியவந்தது.

கருவைக் கலைக்க முடிவெடுத்த அப்பெண் கோல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். தான் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதாலும் குழந்தையை பராமரிக்க தன்னால் முடியாது என்பதாலும் 23 வார கருவைக் கலைக்க அனுமதிக்கும்படி பாதிக்கப்பட்ட இளம்பெண் நீதிமன்றத்திடம் கோரினார்.

அம்மனுவைக் கடந்த மாதம் 29ம் தேதி விசாரித்த நீதிமன்றம், கருவைக் கலைத்தால் பெண்ணுக்கு ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து ஆராய மருத்துவக் குழு ஒன்று அமைக்கும்படியும் அக்குழுவின் ஆய்வு முடிவுகளை அறிக்கையாக பிப்ரவரி 2ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு சனிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் 23 வாரக் கருவைக் கலைத்துவிட்டதாக மேற்குவங்காள அரசு நீதிமன்றத்திடம் தெரிவித்தது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிமன்றம், கருவைக் கலைத்தால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மட்டுமே உத்தரவிட்டிருந்ததாகவும் கருவைக் கலைக்க உத்தரவிடவில்லை என்றும் மாநில அரசையும் மருத்துவர்களையும் சாடியது.

உத்தரவின்றி இளம்பெண்ணின் கருவைக் கலைத்ததற்கான காரணம் குறித்து அறிக்கைத் தாக்கல் செய்யும்படி மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறிப்புச் சொற்கள்