132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு

2 mins read
ed01897d-8b52-4c0b-b51d-d6e2b617eb0e
(இடமிருந்து வலம்) வைஜெயந்தி மாலா, பத்மா சுப்பிரமணியம், விஜயகாந்த். - படம்: ஊடகம்

புதுடெல்லி: குடியரசு தினத்தையொட்டி பத்ம விருதுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. இம்முறை தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் மொத்தம் 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவர்களில் ஐந்து பேருக்கு பத்ம விபூஷண் விருதும் 17 பேருக்கு பத்ம பூஷண் விருதும் 110 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட உள்ளது.

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகள் அளித்து கௌரவிப்பது வழக்கம்.

அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த வியாழக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டன.

கலைத்துறையில் சிறப்பாகச் செயல்பட்ட நடிகை வைஜெயந்தி மாலா, நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

காலஞ்சென்ற நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், தமிழக முன்னாள் ஆளுநா் பாத்திமா பீவி ஆகிய இருவருக்கும் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த கும்மி நடனக் கலைஞா் பத்ரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது விவகாரங்களுக்காக முன்னாள் துணை அதிபர் வெங்கையா நாயுடு, சமூகப் பணிக்காக ஸ்ரீபிந்தேஷ்வர் பதக் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் இறந்து முப்பது நாள்கள் ஆன நிலையில் அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டதை வரவேற்றாலும், அவர் உயிருடன் இருக்கும்போதே விருது அறிவிக்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்போம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

டென்னிஸ் வீரா் ரோஹன் போபண்ணா, சுவர்ப்பந்து வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, சேஷம்பட்டி டி சிவலிங்கம், இந்தியாவின் முதல் யானை பெண் பராமரிப்பாளா் பாா்வதி பருவா, வன சூற்றுச்சூழல் ஆா்வலா் சாய்மி முா்மு ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பத்ம விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்