குஜராத் உலக வர்த்தக மாநாட்டில் 35 அமெரிக்க பெருநிறுவனங்கள்

குஜராத் உலக வர்த்தக மாநாட்டில் 35 அமெரிக்க பெருநிறுவனங்கள்

2 mins read
0d120f63-3508-42fd-bfe8-21f7b8b9753e
பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசி வருகிறார். - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

காந்தி நகர்: ‘துடிப்புமிகு குஜராத் உலக வா்த்தக மாநாட்டை’ பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை காலை தொடங்கி வைத்தார்.

குஜராத்தின் காந்திநகரில் நடைபெறும் இந்த மாநாட்டில் கிழக்கு தைமூா் அதிபா் ஜோஸ் ரமோஸ் ஹோா்தா, ஐக்கிய அரபு சிற்றரசு அதிபா் ஷேக் முகமது சையது அல் நஹ்யா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவா்கள் பங்கேற்கின்றனர்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

முன்னதாக, மாநாட்டின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ள குஜராத் உலக வா்த்தகக் கண்காட்சியை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

13 அறைகளைக் கொண்ட இந்தக் கண்காட்சியில் ஆஸ்திரேலியா, தான்சானியா, மொராக்கோ, தென்கொரியா, தாய்லாந்து, பங்ளாதேஷ், சிங்கப்பூா், ஐக்கிய அரபு சிற்றரசு, பிரிட்டன், ஜொ்மனி, நாா்வே, ஃபின்லாந்து, நெதா்லாந்து, ரஷ்யா, ருவாண்டா, ஜப்பான், இந்தோனீசியா, வியட்னாம் உள்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளன.

அதேபோல, சேல்ஸ்ஃபோர்ஸ், அபோட், பிளாக்ஸ்டோன், எச்எஸ்பிசி, யுபிஎஸ், மைக்ரான், சிஸ்கோ, எஸ்ஹெச்ஆர்எம் உள்ளிட்ட 35 ‘ஃபர்ச்சூன்’ அமெரிக்க நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டு முதலீடுகள் குறித்து விவாதிக்க உள்ளன.

அமெரிக்காவின் ஆகப் பெரிய 500 நிறுவனங்களை ‘ஃபர்ச்சூன்’ சஞ்சிகை ஒவ்வோர் ஆண்டும் தரவரிசைப்படுத்தி வெளியிடும். அவையே ‘ஃபர்ச்சூன்’ நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

அதானி குழுமம் ரூ.2 லட்சம் கோடி முதலீடு

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களான முகேஷ் அம்பானியும் கவுதம் அதானியும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டில் பேசிய தொழி லதிபர் முகேஷ் அம்பானி, “2036 ஒலிம்பிக்கை இந்தியா நடத்தும். குஜராத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெரிய முதலீடுகளை மேற்கொள்ளும்,” என்றார்.

தொழிலதிபர் கவுதம் அதானி பேசுகையில், “அடுத்த ஐந்து ஆண்டுகளில், அதானி குழுமம் குஜராத்தில் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்யும்,” என்று அறிவித்தார்.

முதலீடுகளை ஈர்க்க ‘துடிப்பான குஜராத்’ மாநாடு பத்தாவது முறையாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்