ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத்தில் நிச்சயதார்த்த கறிவிருந்தில் மாப்பிள்ளை வீட்டாரின் மனங்குளிர வைக்க தடபுடலாக அசைவ உணவு விருந்தைப் படைத்தனர் பெண் வீட்டார்.
வகை வகையான அசைவ உணவுகளைப் படைத்தும் அங்கு பாரம்பரியமாக இதுபோன்ற கறிவிருந்தில் முக்கிய அம்சமாக இடம்பெறும் ஆட்டுக்கால் இல்லை.
நிச்சயதார்த்த கறிவிருந்து படைக்கும்போது ஆட்டுக்கால் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று பெண்வீட்டாருக்குத் தெரிய வேண்டாமா என்று மாப்பிள்ளை வீட்டார் முணுமுணுக்கத் தொடங்கினர். இது பெண் வீட்டாரின் காதுகளுக்கு எட்டியது.
அதையடுத்து இரு வீட்டாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் கைகலப்புக்கு வழிவகுத்தது. இரு வீட்டாரும் கடுமையான வார்த்தைகளை அள்ளி வீசி ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதைக் கட்டுப்படுத்த அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள், பின்னர் இரு வீட்டாரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப் படுத்தினர்.
ஆனால், மாப்பிள்ளை வீட்டாரோ, ஆட்டுக்கால் இல்லாத இந்த விருந்து, தங்களுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி விட்டதாகக் கூறி திருமணத்தை நிறுத்துவதாக அறிவித்தனர்.
இதையடுத்து, பெண் வீட்டாரும் இப்படிப்பட்ட குடும்பத்துக்கு எங்கள் வீட்டுப் பெண்ணைக் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். இதனால் நிச்சயம் செய்யப்பட்ட அந்தத் திருமணம் நின்று விட்டது.
கடந்த நவம்பர் மாதம் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் இன்னும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.


