தேநீர் கலக்க தாமதம்: தலையில் வெட்டி மனைவியைக் கொன்றவர் கைது

2 mins read
65fc950b-ba20-4216-9e22-159ee3cf4b14
தாயைக் காப்பாற்ற முயன்ற தமது நான்கு குழந்தைகளையும் தரம்வீர் மிரட்டியதாகக் காவல்துறை கூறியது. - படம்: இந்திய ஊடகம்

காசியாபாத்: குடிக்க தேநீரை உடனே கலக்கித் தராத காரணத்துக்காக ஆடவர் ஒருவர் தமது மனைவியை வெட்டிக் கொன்ற கொடூரச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்து உள்ளது.

அங்குள்ள கிராமம் ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) அன்று கொலையாளியான தரம்வீர் ஜாதவ், 52, எனும் கூலித்தொழிலாளியைக் காவல்துறை கைது செய்தது.

சம்பவத்தன்று காலையில் எழுந்த தரம்வீர், தமக்கு தேநீர் வேண்டுமென இருமுறை தமது மனைவி சுந்தரியிடம், 50, கேட்டதாகவும் தேநீர் கலக்க சிறிது நேரம் ஆகும் என்று மனைவி கூறியதாகவும் காவல்துறை கூறியது.

“தேநீர் கலக்க பத்து நிமிடம் ஆகும் என்று மனைவி கூறியதைக் கேட்டு ஆத்திரமடைந்த தரம்வீர், சமையலறையில் இருந்த பாத்திரங்களை எட்டி உதைத்தார். அப்போது மனைவிக்கும் அவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றியது.

“ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற தரம்வீர், வீட்டிலிருந்த வாளை எடுத்து மனைவியின் பின்னாலிருந்து தலையை வெட்டினார். சம்பவம் நிகழ்ந்தபோது சுந்தரி தேநீரைத் தயார் செய்துகொண்டு இருந்தார்.

“சத்தம் கேட்டு விழித்து எழுந்து ஓடி வந்த அந்தத் தம்பதியின் நான்கு குழந்தைகளும் தங்களது தாயைக் காப்பாற்ற முயன்றன. ஆனால், அந்தக் கொடூரத் தந்தை, குழந்தைகளை நோக்கி மிரட்டியவாறு வாளைச் சுழற்றினார்.

“பயந்துபோன அக்குழந்தைகள் தங்களது அறைக்குள் ஓடி ஒளிந்துகொண்டன. அதிக ரத்தம் வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே சுந்தரி உயிரிழந்தார்,” என்று காவல்துறை கண்காணிப்பாளர் விவேக் யாதவ் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’விடம் விவரித்தார்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தார் ஓடி வந்தபோது சுந்தரி ரத்த வெள்ளத்தில் உயிரற்றுக் கிடந்தார். காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறை, தரம்வீர் தமது மனைவியின் சடலத்தின் அருகே உட்கார்ந்து அழுதுகொண்டிருந்ததைக் கண்டதாக ஊடகச் செய்திகள் கூறின.

குறிப்புச் சொற்கள்