இணையம் வழி ரூ.42 லட்சத்துக்கு உணவு வாங்கிய மும்பை ஆடவர்

இணையம் வழி ரூ.42 லட்சத்துக்கு உணவு வாங்கிய மும்பை ஆடவர்

2 mins read
9ed2168a-ad34-4a3c-83ba-db043ff16846
படம் - ஊடகம்
Google News Preferred Icon

மும்பை: மும்பையைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் இவ்வாண்டில் இதுவரை மட்டும் 42 லட்சம் ரூபாய்க்கு இணையம் வழி உணவு ‘ஆர்டர்’ செய்துள்ளதாக இணைய உணவு விநியோக நிறுவனமான  ஸ்விகி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் செய்யப்பட்ட உணவு விநியோகம் பற்றிய விவரங்களையும் அது வெளியிட்டுள்ளது.

இதில், மும்பையைச் சேர்ந்த ஒருவர் தனது செயலி மூலம் ரூ.42 லட்சம் வரை உணவு வகையறாக்களை ‘ஆர்டர்’ செய்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

“இவ்வளவு செலவும் ஒரு நிறுவனத்துக்காக செய்யப்பட்டது அல்ல, தனது குடும்பத்துக்காக தனி நபர் செய்த உணவு ஆர்டர்,” என்று ஸ்விகி நிறுவனம் அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

இதுபோல் உத்தரப்பிரதேசத்திலுள்ள ஜான்சியைச் சேர்ந்த ஒருவர், ஒரே நாளில் 269 உணவுப் பொருள்களையும் புவனேஸ்வர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் 207 பீட்சாக்களையும் விநியோகிக்கும்படி கேட்டிருந்தார்.

ஸ்விகியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட உணவு விநியோகத்தில் முதலிடம் பிடித்துள்ளது பிரியாணிதான். இந்த ஆண்டில் ஒரு நொடிக்கு இரண்டரை பிரியாணி வீதம் ஆர்டர் வந்துள்ளதாம்.

அதிலும், ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரியாணி பிரியர் ஒருவர் ஓராண்டில் 1,633 ஹைதராபாத் பிரியாணிகளை விநியோகிக்கும்படி ஆர்டர் செய்திருந்ததாகவும் தெரிகிறது.

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது சண்டிகாரைச் சேர்ந்த ஒரு குடும்பம் 70 தட்டு பிரியாணிகளை விநியோகிக்க கேட்டுள்ளது. பிரியாணி வகையில் கோழி பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது.

பெங்களூருவை பொறுத்தவரை காதலர் தினத்தன்று ஒரு நிமிடத்துக்கு 271 கேக்குகள் வீதம் ஆர்டர் செய்யப்பட்டது. நாடு முழுவதும் 85 லட்சம் கேக்குகள் வாங்கப்பட்டுள்ளன என ஸ்விகி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் மேலும் தெரிவிக்கிறது..

குறிப்புச் சொற்கள்
உணவு