உ.பி.யில் சாது பிறந்தநாளுக்கு இறைச்சிக் கடைகள் மூடல்; எதிர்க்கட்சிகள் சாடல்

உ.பி.யில் சாது பிறந்தநாளுக்கு இறைச்சிக் கடைகள் மூடல்; எதிர்க்கட்சிகள் சாடல்

2 mins read
19550fe4-6586-49eb-bd17-0884910b3ba0
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். - கோப்புப்படம்: ஊடகம்
Google News Preferred Icon

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில், சாது தன்வர்தாஸ் லீலாராம் வாஸ்வானி என்பவரின் பிறந்த நாளையொட்டி, நவம்பர் 25ஆம் தேதி இறைச்சிக் கடைகளை எல்லாம் மூட வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து கடந்த சனிக்கிழமையன்று மாநிலம் முழுதும் இறைச்சிக் கடைகள் திறக்கப்படவில்லை.

இதுபற்றி உ.பி. அரசு வெளியிட்ட அறிவிக்கையில், “காந்தி பிறந்த நாள், சிவராத்திரி போன்ற நாள்களில் மாநிலத்தில் அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூட அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

“இதன் அடிப்படையில், சாது டி.எல். வாஸ்வானியின் பிறந்த நாளையும் இறைச்சி அற்ற நாளாகக் கடைப்பிடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, அனைத்து இறைச்சிக் கடைகளும் கட்டாயம் மூடப்பட வேண்டும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடி வருகின்றன. இந்தப் போக்கைக் கண்டித்த சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், “பா.ஜ.க. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துகிறது,” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் பா.ஜ.க இதுபோன்ற சர்ச்சை நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்துவருகிறது. சமூகத்தினருக்கிடையே வெறுப்பைப் பரப்புவதும் வேற்றுமையை ஏற்படுத்துவதுமே அதன் குறிக்கோளாகவுள்ளது.

இப்போது கவனம் பெற வேண்டிய பிரச்னைகளாக இருப்பது, விலைவாசி உயர்வும் வேலையில்லாத் திண்டாட்டமுமே. அப்படியிருக்க தேவையற்ற விஷயங்களில் பா.ஜ.க. கவனம் செலுத்திவருகிறது. இது மக்களைப் பிரிக்கச் செய்யும் சூழ்ச்சி என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள் எனவும் அகிலேஷ் யாதவ் கூறினார்.

முதல்வர் யோகி தலைமையிலான உ.பி. அரசு, ஹலால் சான்று பெற்ற உணவுப் பொருள்களின் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு ஆகியவற்றைத் தடை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. இது நாட்டில் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவு மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.