இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேருக்கு கத்தாரில் மரண தண்டனை

இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேருக்கு கத்தாரில் மரண தண்டனை

2 mins read
8b3e75a9-c94e-41f7-bda1-f872bfedd3e3
படம்: - தமிழ் முரசு
Google News Preferred Icon

புதுடெல்லி: கத்தார் நாட்டில் கடந்த ஓராண்டு காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள் 8 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு இந்திய அரசு தனது அதிர்ச்சியையும், அதிருப்தியையும் வெளிபடுத்தியிருக்கிறது.

இஸ்ரேலுக்கு உளவு பார்த்த புகாரில் அவர்கள் 8 பேருக்கும் கத்தார் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கடந்த ஓராண்டு காலமாக கத்தார் நாட்டில் சிறைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள அந்த 8 பேரையும் பிணையில் விடுவிக்குமாறு பலமுறை விண்ணப்பிக்கப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அந்த 8 பேரும் இந்திய கடற்படையில் முக்கிய அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் கத்தாரின் ஆயுதப்படைகளுக்குப் பயிற்சி மற்றும் அது தொடர்புடைய சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனமான தாஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இவர்கள் கத்தார் நாட்டின் நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்த தகவல்களை இஸ்ரேலுக்கு வழங்கி உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட 8 இந்தியர்களும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மீதான வழக்கு வியாழக்கிழமை கத்தார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

“இந்தத் தீர்ப்பு குறித்து தகவல் அறிந்து நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம், விரிவான தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். நாங்கள் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சட்ட ஆலோசனைக் குழுவுடன் தொடர்பில் இருக்கிறோம், மேலும் அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம்,” என்று வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
கத்தார்கடற்படை