மைசூரு தசரா விழாவில் 750 கிலோ தங்க அம்பாரியை சுமந்த அபிமன்யூ யானை

மைசூரு தசரா விழாவில் 750 கிலோ தங்க அம்பாரியை சுமந்த அபிமன்யூ யானை

2 mins read
d42791f9-e731-49a6-bc2c-4d31b21d2696
மைசூரு தசரா விழாவின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை யானை ஊர்வலத்தின்போது 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை அபிமன்யூ என்ற யானை சுமந்து சென்றது. - படம்: என்டிடிவி
Google News Preferred Icon

பெங்களூரு: உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை யானை ஊர்வலத்தின்போது 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை அபிமன்யூ என்ற யானை சுமந்து சென்றது.

கி.பி. 1610ஆம் ஆண்டு மைசூருவை ஆண்ட நால்வடி கிருஷ்ணராஜ உடையார் என்ற மன்னர் விஜயதசமியை முன்னிட்டு தசரா விழாவை கொண்டாடத் தொடங்கினார். பத்து நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இவ்விழாவை காண நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் வருவதால் மைசூரு தசரா உலகப் புகழ் ‍பெற்றது.

414வது ஆண்டாக இந்த ஆண்டில் கடந்த 15ஆம் தேதி இசையமைப்பாளர் ஹம்சலேகா, சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூசை செய்து தசரா விழாவைத் தொடங்கி வைத்தார்.

மைசூரு அரண்மனை, சாமுண்டி மலை, ரயில் நிலையம், பழங்கால கட்டடங்கள், பிருந்தாவன தோட்டம், கிருஷ்ணராஜசாகர் அணை உள்ளிட்டவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதால் மைசூரு விழாக்கோலம் பூண்ட‌து.

இதைத் தொடர்ந்து 10‍ நாட்களும் இளைஞர் தசரா, விவசாயிகள் தசரா, உணவு தசரா, மகளிர் தசரா, விளையாட்டு தசரா, திரைப்பட தசரா, விமானக் கண்காட்சி, மல்யுத்த போட்டி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், மலர்க் கண்காட்சிகளும் ந‌டைபெற்றன.

மன்னர் யதுவீர் அரண்மனை வளாகத்தில் உள்ள பன்னி மரத்துக்கு வழிபாடு செய்தார். பிற்பகல் 5 மணியளவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஜம்பு சவாரி என அழைக்கப்படும் யானைகள் சவாரி தசரா ஊர்வலத்தை சிறப்பு வழிபாடு செய்து தொடங்கி வைத்தார்.

அபிமன்யூ யானை சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை சுமந்து ஊர்வலமாக சென்றது.

சைத்ரா, லட்சுமி உள்ளிட்ட யானைகளும், குதிரைப் படை, ஒட்டகப் படைஆகியவையும் அதனை பின்தொடர்ந்து ஊர்வலமாக சென்றன.

பன்னி மண்டபத்தை நோக்கி 5 கிமீதூரம் சென்ற இந்த ஊர்வலத்தில் கர்நாடகாவில் உள்ள 30 மாவட்ட நிர்வாகங்களின் சார்பிலும் கலைகலாசார வாகனங்கள், இசைக்குழுவினர், நாட்டுப்புறக் கலைக்குழுவினரும் பின்தொடர்ந்து சென்றனர்.

இந்த கண்கொள்ளா காட்சியை அரண்மனை வளாகத்தில் இருந்து மட்டும் 30 ஆயிரம் பேர் கண்டுகளித்தனர். இதுதவிர பன்னி மண்டபம் வரை மைசூருவின் முக்கிய சாலைகளிலும், வீதிகளிலும் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

குறிப்புச் சொற்கள்