ரூ.100 கோடிக்கு மேல் இணைய மோசடி: 76 இடங்களில் சிபிஐ சோதனை

ரூ.100 கோடிக்கு மேல் இணைய மோசடி: 76 இடங்களில் சிபிஐ சோதனை

1 mins read
4f047b2c-2330-4f53-96ef-7554e86d8bc4
ஒன்பது கால் சென்டர்கள் உட்பட 76 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். - கோப்புப்படம்
Google News Preferred Icon

புதுடெல்லி: இணையக் குற்றங்கள், மோசடி தொடர்பாக நாடு முழுவதும் 76 இடங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது. அந்தச் சோதனையில் ஏராளமான கணினிகள், கைப்பேசிகள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

உ.பி., ம.பி., கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், டெல்லி மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் சிபிஐயின் அதிரடிச் சோதனை நடைபெற்றது.

ஏராளமான வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. அப்பாவி மக்களை ஏமாற்ற பயன்படுத்தப்பட்ட 15 மின்மடல் முகவரிகளும் முடக்கப்பட்டன. இவ்வாறு சிபிஐ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அப்பாவி இந்தியர்களை ஏமாற்றி ரூ.100 கோடிக்கு மேல் கிரிப்டோ கரன்சி ஊழல் நடைபெற்றுள்ளது. இது தவிர இணைய நிதி முறைகேடுகள், மோசடிகள் தொடர்பாக ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நிதி உளவுப் பிரிவு அளித்த தகவல்கள்படி இந்த வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது.

தொழில்நுட்ப உதவிகள் அளிப்பதாகக் கூறி, வெளிநாட்டினரை கால் சென்டர் மையங்கள் ஏமாற்றியதாக அமேசான் மற்றும் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் புகார்கள் அளித்தன. இதையடுத்து இணைய முறைகேடுகளை ஒடுக்க நாடு முழுவதும் ஒன்பது கால் சென்டர்கள் உட்பட 76 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்