மாணவர்களுக்காக அபார் அட்டையை அறிமுகம் செய்கிறது மத்திய அரசு

மாணவர்களுக்காக அபார் அட்டையை அறிமுகம் செய்கிறது மத்திய அரசு

2 mins read
16d22197-7e2b-4b88-9c00-00d062c02be2
மாணவ, மாணவியர்க்கு தனித்துவ அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது. - கோப்புப்படம்
Google News Preferred Icon

புதுடெல்லி: ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு ஆதார் அட்டை அளிக்கப்பட்டுள்ளதைப் போல இந்திய மாணவ, மாணவியர்க்கு தனித்துவ அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.

மாணவர்களுக்கான இந்தத் தனித்துவ அட்டைக்கு அபார் (Automated Permanent Academic Account Registry-APAAR) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் ‘ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள அட்டை’ எனவும் அழைக்கப்படுகிறது. ‘தானியங்கி நிரந்தர கல்விக் கணக்குப்பதிவு’ என்பதை குறிக்கும் வகையில் இதற்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சு தெரியப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கையில் ‘ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள அட்டை’ திட்டமும் இடம்பெற்றுள்ளது.

மத்திய அரசின் அபார் அட்டை திட்டத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. இருப்பினும் பல மாநிலங்கள் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அரசியல் கட்சிகள் இதுகுறித்து விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றன. மாணவர்களின் விவரங்களை மின்னியல் படுத்துவது பாதுகாப்பானதாக இருக்க முடியுமா என்ற கேள்வியை கல்வியாளர்கள் பலர் எழுப்பியுள்ளனர்.

குறிப்பாக புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாத மாநிலங்கள், அபார் அட்டைக்கான பணிகளைத் தொடங்காமல் உள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் ஆளும் கர்நாடகா மாநிலத்தில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, அங்கு மாநிலத்திற்கென தனித்துவமான புதிய கல்விக் கொள்கையை வகுக்கும் பணியில் அம்மாநில அரசு இறங்கியுள்ளது.

இந்நிலையில் பெற்றோர்களிடம் அபார் அட்டை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தங்கள் குழந்தைகளுக்கு அபார் அட்டை விண்ணப்பிக்க அனுமதி பெறுமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்