பிட்காயின் மோசடி: காவல்துறை உயர் அதிகாரிகளிடம் அதிரடிச் சோதனை

பிட்காயின் மோசடி: காவல்துறை உயர் அதிகாரிகளிடம் அதிரடிச் சோதனை

2 mins read
2858b956-2f7e-4e13-a0b8-0869e16345a7
-
Google News Preferred Icon

பெங்களூரு: பிட்காயின் முறைகேடு விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்குச் சொந்தமான ஏழு இடங்களில் சிறப்பு விசாரணைக் குழுவினர் அதிரடிச் சோதனை நடத்தினர்.

பிட்காயின் மோசடி விவகாரம் தொடர்பாக பெங்களூரில் உள்ள ஐந்து சிஐடி அதிகாரிகளின் வீடுகளில் சிறப்பு விசாரணைக் குழுவினர் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.

இணையக் குற்றத்தடுப்பு நிபுணர் சந்தோஷ், துணைக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதர் பூஜாரி உள்பட 5 அதிகாரிகளுக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள் என 7 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

முறைகேடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மடிக்கணினியை ஒப்படைக்காததால் தான் இந்த அதிரடிச் சோதனை நடத்தப்பட்டதாக சிறப்பு விசாரணைக் குழுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த பாஜக ஆட்சியின்போது பிட்காயின் மோசடி அரங்கேறியது. பெங்களூருவை சேர்ந்த பிரபல ஹேக்கர் ஸ்ரீகிருஷ்ணா, அரசு இணையத் தளங்களை முடக்கி பணமோசடியில் ஈடுபட்டார். இதேபோல் அவர் கிரிப்டோ கரன்சி மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளையும் முடக்கி கைவரிசை காட்டி இருந்தார்.

அனைத்துலக காவல்துறையினரால் அவர் தேடப்பட்டு வந்தார். இதற்கிடையே. பெங்களூரு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடம் சிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த சமயத்தில் ஸ்ரீகிருஷ்ணாவை மிரட்டி பிட்காயின் மற்றும் வங்கி வைப்புத்தொகைகளைச் சட்டவிரோதமாகப் பெற்றுக் ண்டனர்.

மேலும் பிட்காயின் மோசடி வழக்கில் இருந்த சில முக்கிய ஆவணங்களையும் அவர்கள் அழித்துவிட்டதாக கூறப்பட்டது.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும், சிறப்புப் புலனாய்வுக் குழுவைக் கொண்டு பிட்காயின் முறைகேடு விவகாரம் பற்றி விசாரிக்கப்படும் என கூறப்பட்டது.

அதன்படி சிறப்பு விசாரணைக் குழுவினர், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ஹேக்கர் ஸ்ரீகிருஷ்ணாவிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், சிஐடி அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் அவரை மிரட்டிப் பணம் பறித்ததாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.

இதில் மேலும் பல அரசியல் தலைவர்கள் சிக்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்