திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீடு, விடுதி, அலுவலகங்களில் வருமான வரிச் சோதனை

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீடு, விடுதி, அலுவலகங்களில் வருமான வரிச் சோதனை

2 mins read
dabfbc70-6e89-43a0-b146-1a71cad2fd43
புதுச்சேரியில் சோதனை நடைபெறும் மருத்துவக் கல்லூரி வளாகம். - படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகரட்சகன் மருத்துவக் கல்லூரியில் இந்திய வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அத்துடன், ஜெகத்ரட்சகன் எம்.பி தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரிக்கு அருகிலுள்ள வில்லியனூர் அகரம் கிராமத்தில் ஜெகத்ரட்சகனுடைய மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை இந்திய நேரப்படி காலை ஏறத்தாழ 2 மணிக்கு சென்னை, புதுச்சேரி வருமான வரித் துறையைச் சேர்ந்த 12 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கல்லூரி நிர்வாகக் கட்டடம், மருத்துவமனை நிர்வாகக் கட்டடம் உள்ளிட்ட பல இடங்களில் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து உள்ளே வேலை செய்துகொண்டிருந்த ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை, மேலும் காலை 6 மணியிலிருந்து வேலை பார்க்க வேண்டிய தாதியர், மருத்துவமனை ஊழியர்கள், பயிற்சி மருத்துவர்கள் என 500க்கும் மேற்பட்டவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை.

மருத்துவமனை, அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லும் நோயாளிகள், அவர்தம் உறவினர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து 8 மணிக்கு மேல் வந்த நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாததால் வெளியிலேயே காத்திருந்தனர். பிறகு 9.30 க்கு மேல் அடையாள அட்டையை பரிசோதித்த பின்பு மருத்துவ மாணவர்களும் மருத்துவமனையில் பணியாற்றும் தாதியரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

ஜெகத்ரட்சகன் எம்.பியின் சொந்த ஊர் புதுச்சேரிக்கு அருகாமையிலுள்ள விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர் கலிங்கமலையில் உள்ளது. இவருக்கு புதுச்சேரியில் நட்சத்திர ஹோட்டல்கள், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. எனினும் மருத்துவக் கல்லூரியில் மட்டுமே வருமான வரிச் சோதனை நடைபெறுகிறது. இந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் ஜெகத்ரட்சகனுக்கு சட்டவிரோதமாக முதலீடு செய்தது தொடர்பாக, அவருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை சில ஆண்டுகளுக்கு முன் இந்திய அமலாக்கத்துறை முடக்கியது இங்கு நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்