உச்சத்தில் அமெரிக்க-இந்திய உறவு: ஜெய்சங்கர் பெருமிதம்

உச்சத்தில் அமெரிக்க-இந்திய உறவு: ஜெய்சங்கர் பெருமிதம்

2 mins read
70679b29-b37d-4c62-80d0-9b1546a9196c
அமெரிக்க - இந்திய உறவு சந்திரயானைப் போலவே, சந்திரனுக்கும் அதற்கு அப்பாலும் செல்லும் என்று வாஷிங்டன் நகரில் இந்தியர்கள் மத்தியில் பேசுகையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

வாஷிங்டன்: இந்தியா-அமெரிக்க உறவுகள் முன்னெப்போதும் காணாத உயரத்தைத் தொட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பிரதமர்மோடி தலைமையிலான அரசாங்கம் இந்த உறவுகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்றும் சந்திரயான்போல இருதரப்பு உறவுகளும் சந்திரனுக்கு அப்பாலும் செல்லும் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜெய்சங்கர் அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.

வாஷிங்டன் நகரில் இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த ‘நட்பின் வண்ணங்களைக் கொண்டாடும்’ நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்தியர்கள் வந்திருந்தனர்.

அவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜெய்சங்கர், “இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு உச்சத்தில் உள்ளது. ஆனால் அமெரிக்காவில் அவர்கள் சொல்வதுபோல், நீங்கள் இன்னும் எதையும் பார்க்கவில்லை. எனவே, இந்த உறவை வேறு நிலைக்கு கொண்டு செல்லப்போகிறோம்,” என்றார்.

ஜி20 மாநாட்டின் வெற்றி அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் நடந்திருக்க முடியாது என்றார் அவர்.

“தலைவர் என்ற முறையில் சில விஷயங்கள் நன்றாக நடக்கும் போது, அவர் எப்போதும் நன்மதிப்பைப் பெறுகிறார். அது நியாயமானது. ஆனால், ஜி20 மாநாட்டிற்காக அனைத்து உறுப்பினர்களும் அதன் வெற்றிக்காக உழைக்கவில்லை என்றால் ஜி20 நாடுகள் ஒன்றிணைந்திருக்க முடியாது.

“வெற்றிகரமாக ஜி20 மாநாட்டை நடத்த அமெரிக்காவிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த பங்களிப்பு, ஆதரவை பொதுவெளியில் நான் அங்கீகரிக்க விரும்புகிறேன்.

“இது உண்மையில் எங்கள் வெற்றியாக இருக்கலாம். ஆனால் இது ஜி20 நாடுகளின் வெற்றி என்று நான் நினைக்கிறேன்.

“என்னைப் பொறுத்தவரை, இது இந்தியா-அமெரிக்க ஒத்துழைப்புக்குக் கிடைத்த வெற்றியாகும். இதன்மூலம் அமெரிக்க - இந்திய உறவு சந்திரயானைப் போலவே, சந்திரனுக்கும் அதற்கு அப்பாலும் செல்லும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

“இரு நாடுகளுக்கும் இடையிலான மனிதநேயம் இருதரப்பு உறவை தனித்துவமாக்குகிறது. இருதரப்பு உறவைக் கட்டியெழுப்புவதில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு அற்புதமான ஒன்று,”என்று ஜெய்சங்கர் தமது உரையில் குறிப்பிட்டார்.

மேலும், தொழில்நுட்ப வளர்ச்சி, சந்திரயான்-3 மற்றும் ஜி20 வெற்றியைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், இன்றைய இந்தியா முன்பு இருந்ததைவிட வித்தியாசமானது என்றார்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்கா