டெங்கி காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை தீவிரம்

டெங்கி காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை தீவிரம்

2 mins read
011f9790-30fe-424f-9144-c628db7afb93
மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா. - கோப்புப்படம்: ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவின் பல மாநிலங்களில் டெங்கி காய்ச்சல் பரவி வருவதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

டெங்கி காய்ச்சலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் டெங்கி பரவலின் நிலை மற்றும் எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் அவருக்கு எடுத்துக்கூறினர்.

அதையடுத்து டெங்கிக் காய்ச்சல் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள திருவேற்காட்டில் தீவிர டெங்கி ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டெங்கிக் காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அந்த வீட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருவேற்காடு நகராட்சிப் பகுதியில் டெங்கி காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

திருவேற்காடு நகர்மன்ற தலைவர் மூர்த்தியின் ஆலோசனைப்படி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா மேற்பார்வையில் துப்புரவு அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் ஊழியர்கள் டெங்கி கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து பேசிய நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுப்புழு ஆதாரங்களை அழிப்பதற்காக நகராட்சியில் இருந்து 105 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

“டெங்கி கொசுப் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அந்த வீட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. நூம்பல் பகுதியில் தனியார் தொழிற்சாலை மற்றும் தனியார் பள்ளியில் கொசு உற்பத்தி காணப்பட்டதால் ஒரே நாளில் ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
டெங்கி