பாகிஸ்தானில் பிறந்து இந்தியாவில் குடியேறியவர் மீது விதிக்கப்பட்ட அபராதம் ரத்து

பாகிஸ்தானில் பிறந்து இந்தியாவில் குடியேறியவர் மீது விதிக்கப்பட்ட அபராதம் ரத்து

1 mins read
bb96e6d1-86a9-47b5-a0b2-c22356e36589
படம்: - தமிழ் முரசு
Google News Preferred Icon

புதுடெல்லி: பாகிஸ்தானில் பிறந்த மல்ஹோத்ரா என்பவர் குடும்பத்துடன் 1992ஆம் ஆண்டு இந்தியாவில் குடியேறினார். அவரும் அவரது குடும்பத்தினரும் 2017ஆம் ஆண்டில் இந்திய குடியுரிமை பெற்றனர்.

இந்நிலையில், மல்ஹோத்ரா 2007-ல் ரூ.13.50 லட்சம் மதிப்புள்ள ஒரு இடத்தையும், 2012-ல் ரூ.19 லட்சம் மதிப்புள்ள மற்றொரு இடத்தையும் வாங்கினார்.

அந்த சொத்துகளை வாங்கும்போது அவர், பாகிஸ்தானியராக இருந்ததால், ரிசர்வ் வங்கியின் அனுமதியைப் பெறவில்லை என்று கூறி, அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் (பெமா) 7-வது விதியை மீறியதற்காக அமலாக்கத் துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், ரூ.3 லட்சம் அபராதமும் மல்ஹோத்ரா செலுத்தினார்.

இந்த விவகாரத்தில், அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்ததையடுத்து ஆவணங்களின் அடிப்படையில் அவருக்கு மேலும் ரூ.4.5 லட்சம் அபராதம் விதித்து மேல் முறையீட்டு சிறப்பு இயக்குநர் உத்தரவிட்டார்.

அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு எதிராக மல்ஹோத்ரா, மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை அணுகினார். இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, சொத்துகளை வாங்கும்போது சட்ட நுணுக்கங்கள் தனக்குத் தெரியாது என்றும், ஏற்கெனவே ரூ.3 லட்சம் அபராதமாக செலுத்தி விட்டதாகவும், தான் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை, சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்றும் வாதிட்டார்.

இதையடுத்து தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், “மல்ஹோத்ரா ஏற்கெனவே விதிக்கப்பட்ட ரூ.3 லட்சம் அபராதத்தை செலுத்தியுள்ளார். இந்த நிலையில், மேலும், ரூ.4.5 லட்சத்தை அபராதமாக விதித்ததை நியாயப்படுத்த முடியாது. அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்,” என தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்