ஆகாயத்தை அடுத்து ஆழ்கடல் சாதனை; 6,000 மீ. ஆழம் மூழ்கும் இந்திய நீர்மூழ்கி

ஆகாயத்தை அடுத்து ஆழ்கடல் சாதனை; 6,000 மீ. ஆழம் மூழ்கும் இந்திய நீர்மூழ்கி

2 mins read
80587032-2018-4ef7-8352-78cf8a1bd3c7
சென்னையில் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் உருவாகி வரும் மத்ஸ்யா 6000 நீர்மூழ்கிக் கப்பல். - படம்: தமிழக ஊடகம் 
Google News Preferred Icon

புதுடெல்லி: ஆகாயத்தில் சாதனை படைத்து வரும் இந்தியா அடுத்ததாக ஆழ்கடலில் தன் கவனத்தைச் செலுத்துகிறது.

கடலுக்குக் கீழே 6,000 மீட்டர் ஆழம் வரை ஆய்வாளர்களைக் கொண்டு செல்லும் வகையில் புதிய நீர்மூழ்கிக் கப்பலை அது வடிவமைக்கிறது.

அந்த நீர்மூழ்கிக் கப்பல் நடத்தும் ஆய்வுகளால் கடல்வாழ்விடத்திற்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் எந்தவொரு பாதிப்பும் இருக்காது என்ற தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் புவிசார் அறிவியல் அமைச்சின் கீழ் செயல்படும் சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் ‘மத்ஸ்யா 6000’ என்ற நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கி வருகிறது.

அது மூன்று ஆய்வாளர்களை கடலுக்குக் கீழே 6,000 மீட்டர் ஆழத்திற்குக் கொண்டு செல்லும்.

அவர்கள் ஆழ்கடலின் வளங்களை எல்லாம் ஆய்வு செய்வார்கள்.

புதிய தொழில்நுட்பங்களை வடிவமைத்து இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான உத்திகளை வகுப்பார்கள்.

இதுவே புதிய நீர்மூழ்கியின் நோக்கம் என்று தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநரான ஆனந்த் ராமதாஸ் தெரிவித்தார்.

புதிய நீழ்மூழ்கிக் கப்பல் 2.1 மீட்டர் விட்டம் கொண்டதாக இருக்கும். 22 மி.மீ. தடிமன் கொண்ட உலோகக் கலவை மூலம் அது தயாரிக்கப்பட்டு வருகிறது.

அந்தக் கப்பல் இந்தியாவின் முதல் மனித கடல் ஆய்வுக் கப்பலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொருளியல் வளர்ச்சி, வாழ்வாதாரம் மேம்பாடு, அதிக வேலை வாய்ப்புகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல் உயிரினப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவது அந்த நீர்மூழ்கி கப்பல் திட்டத்தின் நோக்கம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்