உறக்கத்தில் பிரக்யான்; 14 நாட்களுக்குப் பிறகு விழித்தெழும்

உறக்கத்தில் பிரக்யான்; 14 நாட்களுக்குப் பிறகு விழித்தெழும்

2 mins read
b6474e3b-eeec-45aa-967d-b14240e4769a
நிலவில் நடைபோடும் பிரக்யான் ஊர்திகலம். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

ஸ்ரீஹரிகோட்டா: நிலவில் ஒய்யாரமாக நடைபோட்டு வரும் பிரக்யான் எனும் ரோவர் ஊர்தி கலம் அடுத்த 14 நாட்களுக்கு உறக்கத்தில் இருக்கும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அடுத்த பதினான்கு நாட்களுக்கு இரவுப் பொழுதாக இருப்பதால் பிரக்யானுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் கிடைக்காது. இதனால் அதன் செயல்பாடுகள் 14 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அது கூறியது.

“செப்டம்பர் 22ஆம் தேதி சூரிய உதயத்தின்போது சூரிய சக்தியைப் பெறுவதற்காக பிரக்யானின் சூரியத் தகடுகள் சூரியனை நோக்கி வைக்கப்பட்டுள்ளன,” என்று ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் வெளியிட்ட தகவலில் இஸ்ரோ குறிப்பிட்டது.

ஒரு வேளை பிரக்யான் விழித்தெழவில்லையென்றால் அது நிலவிலேயே இந்தியாவின் தூதராக அங்கேயே தங்கியிருக்கும்.

சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ஊர்திகலம் நிலவின் மேற்பரப்பில் 100 மீட்டர் தூரம் வரை நகர்ந்து ஆய்வு மேற்கொண்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்தார்.

சூரியனை நோக்கி ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் சனிக்கிழமை வெற்றிகரமாக ஏவப்பட்டதை அடுத்து, விஞ்ஞானிகள் மத்தியில் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பேசினார்.

‘‘இஸ்ரோவின் தொடர் சாதனைகளை உலகமே உற்று நோக்குகிறது. இது இந்தியாவுக்கு உத்வேகமான தருணமாகும். இதற்கு வித்திட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. ஆதித்யா எல்-1 திட்டத்தில் இரவு, பகல் பாராமல் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்,’’ என்றார்.

இதன் பிறகு பேசிய இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத், “சந்திராயன்-3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர் சாதனங்கள் இதுவரை சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றன. இதில் ரோவர் வாகனம் நிலவின் மேற்பரப்பில் 100 மீட்டர் தூரம் வரை நகர்ந்து ஆய்வு மேற்கொண்டுள்ளது. நிலவில் விரைவில் இரவு தொடங்க உள்ளதால், அடுத்த ஓரிரு நாட்களில் இவ்விரு கலன்களின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

‘‘சூரியனை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கனவு தற்போது நனவாகியுள்ளது,” என்று கூறிய ஆதித்யா திட்ட இயக்குநர் நிகர் சாஜி, அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

“ஆதித்யா விண்கலம் செயல்படத் தொடங்கினால், சூரிய ஆராய்ச்சி மற்றும் அதுசார்ந்த தகவல்களை இந்தியாவும், உலக நாடுகளும் அறிந்துகொள்வதற்கான களஞ்சியமாக இது அமையும்,’’ என்று அவர் மேலும் கூறினார்.