பாசுமதி அரிசி ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு

பாசுமதி அரிசி ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு

1 mins read
c077b3f6-ee27-462a-9f12-1e58902f3055
ஒரு மெட்ரிக் டன் பாசுமதி அரிசியின் குறைந்தபட்ச விலை 1,200 டாலர் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

புதுடெல்லி: பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு இந்திய அரசு புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்து உள்ளது.

கடந்த சனிக்கிழமை, புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20 விழுக்காடு வரி விதித்தது. அதற்கு மறுநாளே பாசுமதி அரிசிக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

ஒரு மெட்ரிக் டன் பாசுமதி அரிசிக்கான ஏற்றுமதி விலை குறைந்தபட்சம் 1,200 டாலராக இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி இனி 1,200 டாலருக்குக் குறைவாக பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்ய முடியாது. பாசுமதி அரிசி ஏற்றுமதியைக் குறைக்கும் நோக்கிலும் விலை உயர்வைத் தடுக்கவும் இந்தக் கட்டுப்பாடுகொண்டு வரப்படுவதாக செய்தி வெளியாகி உள்ளது.

கடந்த சில வாரங்களாக பெய்துவந்த கனமழை காரணமாக இந்தியாவில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அரிசி விலை உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில் அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 விழுக்காடாக உள்ளது. இந்தியாவில் இருந்து 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால், உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் அரிசி வகைகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்து வருகிறது.

ஏற்றுமதிக்கு இந்தியா கட்டுப்பாடு விதித்திருப்பதால் அனைத்துலகச் சந்தையில் அரிசி விலை உயர்ந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்