சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்தது விக்ரம் கலன்

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்தது விக்ரம் கலன்

1 mins read
08efe4ac-b92b-425d-9f17-24e401b84643
நிலவுக்கு மிக அருகில் விக்ரம் கலன். - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் கலன் வெற்றிகரமாகப் பிரிந்து நிலவின் சுற்றுப் பாதையில் பயணம் செய்கிறது.

வரும் 23ஆம் தேதி அந்தக் கலனை நிலவில் தரையிறக்கும் பணியை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன (இஸ்ரோ) வல்லுநர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து அதிலிருந்து பிரக்யான் ஊர்தி நிலவில் ஆய்வுப் பணியை மேற்கொள்ள உள்ளது.

வியாழக்கிழமை பிற்பகல் 1.15 மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் பிரிக்கப்பட்டுள்ளது.

அது நிலவுக்கு 153 x 163 கி.மீ. தொலைவில் பயணம் செய்கிறது. படிப்படியாக அதன் உயரம் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக இம்மாதம் 23ஆம் தேதி நிலவில் அது தரையிறங்கும். நிலவின் தென் துருவப் பகுதியில் அதைத் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் 615 கோடி ரூபாயில் இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ஏவுகணை மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப்பாதையை நீட்டிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சந்திரயான் விண்கலம் ஆகஸ்ட் 1ஆம் தேதி புவி வட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் தள்ளப்பட்டது.