சூரத்: இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்த மனுவை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதனால் அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையும் எம்.பி. பதவி ரத்தும் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோலாரில் மோடி என்ற பெயரைக் குறிப்பிட்டு அவதூறாகப் பேசியதாக குஜராத் மாநில முன்னாள் அமைச் சரும் பாஜக எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ் மோடி, சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கில் ராகுல் குற்றவாளி என்றும் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தும் நீதிபதி எச்.எச்.வர்மா, கடந்த மாதம் 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார்.
இதையடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவியைத் தேர்தல் ஆணையம் பறித்தது.
இந்த நிலையில் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி கடந்த 3ஆம் தேதி சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி மேல் முறையீடு செய்தார். ஆனால் ராகுல் காந்தியின் மனுவை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில் இடைக்காலத் தடை கிடைத்திருந்தால் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி.யாவதற்கு வாய்ப்பு இருந்திருக்கும்.
இந்த நிலையில் அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது.

