மும்பை: ஹிண்டென்பர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கை வெளியானதை அடுத்து அதானி குழும நிறுவனங்கள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இந்தியப் பங்குச் சந்தையில் அதானி நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு கடுமையாகச் சரிந்துள்ளன.
இதன் எதிரொலியாக உலகப் பணக்காரர்கள் வரிசையில் அதானி 11ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இதுவரை 'புளூம்பெர்க் பில்லியனர்ஸ்' குறியீட்டில் நான்காம் இடத்தில் இருந்து வந்த அவரது சொத்து மதிப்பானது 84.4 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. ஹிண்டென்பர்க் ஆய்வறிக்கை ஏற்படுத்திய சலசலப்பால் அதானி தமது சொத்து மதிப்பில் 34 பில்லியன் டாலரை இழந்தார்.
இந்தியாவின் மற்றொரு முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 82.2 பில்லியன் டாலராகும்.
இதற்கிடையே அதானி குழும நிறுவனங்கள் வெளியிட்ட புதிய பங்குகளுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. குறைவான விலைக்கு அப்பங்குகள் விற்கப்பட்டபோதும் முதலீட்டாளர்கள் அவற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில், ஹிண்டென்பர்க் ஆய்வறிக்கையில் எழுப்பப்பட்ட 88 கேள்விகளில் பெரும்பாலானவற்றுக்கு தங்களது நிறுவனங்களின் ஆண்டறிக்கை மூலம் உரிய பதில்கள் அளிக்கப்பட்டுள்ளதாக அதானி குழும தலைமை நிதி அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தேசியவாதம் என்ற போர்வையில் அதானி குழமத்தால் மோசடிகளை மறைத்துவிட இயலாது என ஹிண்டென்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

