புதுடெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் தட்டம்மை பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மத்திய அரசு சுகாதார குழுக்களை அனுப்பி வைத்துள்ளது.
கொரோனா நெருக்கடி குறைந்து வருவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ள நிலையில், தட்டம்மை பரவல் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
கேரளா, குஜராத், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தட்டம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உயிரிழப்பும் ஏற்படத் தொடங்கி உள்ளது.
குறிப்பாக, குழந்தைகள் இடையே தட்டம்மை பாதிப்பு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக பாதிப்பைக் குறைக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக மத்திய அரசு சிறப்புக் குழுக்களை அனுப்பி வைத்துள்ளது.
மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள மும்பை, மலப்புரம், அகமதாபாத், ராஞ்சி ஆகிய நகரங்களில் தட்டம்மை பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவவதாக மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
இதையடுத்து அந்நகரங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள குழுக்களில் மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுக்களுடன், கேரளா, குஜராத், ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள சுகாதார, குடும்பநல மண்டல அலுவலகத்தின் முதுநிலை மண்டல இயக்குநர்கள் இணைய உள்ளனர். மத்திய அரசின் குழுக்களைத் தொடர்புகொண்டு மாநில அரசின் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளனர்.
ஆய்வு குறி்த்த தகவல்களை அவ்வப்போது பெற்று, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளும் திட்டமிட உள்ளன.
மத்திய அரசின் குழுக்கள் சம்பவ பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட உள்ளதாகவும் பொது சுகாதார அம்சங்கள், வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்தல் குறித்து மாநில அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, மும்பையில் மட்டும் புதிதாக மேலும் முப்பது பேருக்கு தட்டம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது மும்பையில்தான் தட்டம்மை பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துவிட்டனர். புதிதாக பாதிக்கப்பட்ட 30 பேரில் ஒருவர் இறந்துவிட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
மும்பையில் மட்டும் இதுவரை 233 பேருக்கு தட்டம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பாதிப்பு காரணமாக எட்டு மாத பச்சிளங் குழந்தையும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

