புதுடெல்லி: இம்மாதம் 9ஆம் தேதி இந்தியாவின் 50வது தலைமை நீதிபதியாக நீதிபதி தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் பதவியேற்றதைத் தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் நீதித்துறை இப்போது மிகவும் நேர்மையான குணம் கொண்ட ஒருவரால் வழிநடத்தப்பட உள்ளது.
அறிவார்ந்தவராகவும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டவராகவும் அறியப்படும் தலைமை நீதிபதி சந்திரசூட், 63, மனித உரிமைகளையும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களையும் ஆதரிக்கக் கூடியவர்.
தன் இரண்டாண்டு பதவிக் காலத்தில் நாடாளுமன்றம், அரசிய லமைப்புக்கு முரணான எந்தவொரு கொள்கைக்கும் நீதிபதி சந்திரசூட் சவாலாக விளங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஆர்வலர்கள், சட்ட வல்லுநர்கள் மத்தியில் நிலவுகிறது.
மென்மையாகப் பேசும் இயல்பு கொண்ட இவர், பல சந்தர்ப்பங்களில் உச்ச நீதிமன்ற அமர்வுகளில் சிறுபான்மையினருக்கு ஆதரவாக அவர்களது தனிப்பட்ட உரிமைகளுக்கான தீர்ப்புகளில் பக்கதுணையாக நின்றுள்ளார்.
உதாரணமாக, இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆதார் சட்டம் அரசமைப்புச் சட்டப்படி செல்லத்தக்கதா என்ற வழக்கில், ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதி சந்திரசூட் கருத்து மட்டுமே மாறுபட்டிருந்தது.
ஆதார் சட்டத்தை நிதி மசோதாவாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது 'தந்திரம்' என்றும் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அவர் தமது தீர்ப்பில் வர்ணித்தார்.
பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது என்றாலும், சந்திரசூட் வழங்கிய தீர்ப்பு முக்கியமாகக் கவனிக்கப்பட்டது.
2018ஆம் ஆண்டு தீர்ப்பில், கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்ட ஐந்து ஆர்வலர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கினார்.
"நீதிபதி சந்திரசூட்டின் சாதனை என்னவெனில், அவர் எப்போதும் பாதிக்கப்படக்கூடியவர்களின் அவலநிலையை உணர்ந்து தனிமனித சுதந்திரத்தைப் போற்றுபவர்" என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கூறினார்.
கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்குள் நுழையும் பெண்களின் உரிமை தொடர்பான வழக்கில், "10 முதல் 50 வயது வரையிலான பெண்களை விலக்கி வைப் பது அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாகும்" என்று நீதிபதி குறிப் பிட்டிருந்தார்.
மதரீதியில், பாரபட்சமானது என்று வர்ணிக்கப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீரின் சுயாட்சி, அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நிதியில் வெளிப் படைத்தன்மை பற்றிய வழக்குகளை நீதிபதி எவ்வாறு கையாள்வார் என்பதில்தான் அனைத்து மக்களின் பார்வையும் உள்ளது.
தலைமை நீதிபதி சந்திரசூட் 1.3 பில்லியன் மக்களுக்குச் சேவை செய்யும் நீதித்துறையில் பெரும் நிர்வாகச் சவால்களைச் சமாளிக்கவேண்டும். இதில் இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 45 மில்லியன் வழக்குகளும் அடங்கும்.
நீதிபதி சந்திரசூட் மும்பையில் வளர்ந்து, டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறை யில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் வழக்கறிஞர்கள். அவரது முதல் மனைவி 2007ல் புற்றுநோயால் இறந்தார். இப்போது வழக்கறிஞரும் தன் இரண்டாவது மனைவியுமான கல்பனா தாசுடன் சிறப்புத் தேவைகள் கொண்ட இரு மகள்களை வளர்த்து வருகிறார்.

