காஞ்சிபுர விவசாயிக்குப் பாராட்டு
புதுடெல்லி: சூரிய சக்தியில் உலகளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
'மனதின் குரல்' எனும் மாதாந்திர 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் வழியாக அவர் நேற்று நேரடி உரையாற்றினார்.
"சூரிய சக்தியை இந்தியா பெரிய அளவில் பயன்படுத்துகிறது. இன்று நாம் மிகப்பெரிய சூரிய சக்தியை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக மாறிவிட்டோம். சூரிய சக்தி பயனீட்டின் மூலம் பணத்தை மிச்சப்படுத்த முடியும்," என்று பிரதமர் குறிப்பிட்டார்.
"தமிழகத்தின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எழிலன் என்ற விவசாயி, 'பிரதமர் குசும் யோஜனா' திட்டத்தின் பயனை அடைந்துள்ளார். அவரது பண்ணையில் 10 குதிரைத்திறன் கொண்ட 'சோலார் பம்ப்' செட்டை அமைத்துள்ளார்.
"இதன் மூலம் அவர் பண்ணையில் விவசாயத்திற்கு என எதுவும் செலவு செய்வது கிடையாது. விவசாய நிலத்தில் பாசனம் செய்ய அரசின் மின் விநியோகத்தை அவர் நம்பியிருக்கவில்லை. இதேபோல் சூரிய சக்தி மூலம் பலர் பயன்அடைந்துள்ளனர்.
"குஜராத்தின் மோதிரா பகுதியில் பெரும்பாலான வீடுகளில் சோலார் எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
"அங்குள்ள மக்கள் சூரிய சக்தி மூலம் மின்சாரத்தைப் பயன்படுத்துவது மட்டுமன்றி, அதன் மூலம் வருமானமும் பெறுகிறார்கள்.
"சூரிய மின்சக்தி போல் விண்வெளித் துறையிலும் இந்தியா பல சாதனைகளைப் படைத்துள்ளது. இந்தியாவின் சாதனைகளை உலகம் ஆச்சர்யத்துடன் பார்க்கிறது.
"சில தினங்களுக்கு முன் விண்வெளியில் 36 செயற்கைக்கோள்களை இந்தியா நிலைநிறுத்தியது.
"இந்த சாதனை இந்தியாவிற்கு தீபாவளிப் பரிசாக அமைந்தது. இன்று உலகமே இந்தியாவின் சாதனைகளைக் கண்டு வியந்து நிற்கிறது.
"இந்திய இளைஞர்களுக்காக விண்வெளித்துறை வாய்ப்புகள் திறக்கப்பட்டதும் புரட்சிகரமான மாற்றங்கள் வந்து கொண்டுள்ளன. மின்னிலக்க துறையிலும் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது," என்று பிரதமர் மோடி மேலும் தெரி வித்தார்.

