மும்பை: இந்தியாவில் உள்ள சீன நிறுவனங்கள் மீது அமலாக்க அமைப்புகள் அடிக்கடி விசாரணை நடத்துவது அந்நாட்டின் மீதான வெளிநாட்டு நிறுவனங்களின் வர்த்தக நம்பிக்கையை பாதிக்கிறது என்று சீன தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த 2020ல் எல்லை மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே அரசியல் பதற்றம் ஏற்பட்டது. அப்போதிலிருந்து பல சீன நிறுவனங்கள் வர்த்தகம் ெசய்ய சிரமப்படுகின்றன.
மேலும் பாதுகாப்பு அம்சங்களை சுட்டிக்காட்டி 300க்கும் மேற்பட்ட சீனாவின் கைபேசி செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது.
சீனாவின் முதலீடுகளுக்கான விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
அண்மையில் சீனாவின் பிபிகே எல்க்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான திறன்பேசி தயாரிப்பு விவோ நிறுவனத்திடம் நிதி மோசடி தொடர்பில் இந்திய அமலாக்க அதிகாரிகள் விசாரித்ததாகக் கூறப் படுகிறது.
இதையடுத்து தூதரகத்தின் கருத்து வெளியாகியுள்ளது.
இத்தகைய விசாரணைகள் இந்தியாவின் வர்த்தகங்களுக்கான சூழ்நிலைகள் மேம்படுவதற்குத் தடையாக உள்ளது. சீன நிறுவனங்கள் உட்பட மற்ற நாடுகளில் உள்ள நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுவதற்கும் தடையாக உள்ளது என்று தூதகரத்தின் அறிக்கை குறிப்பிட்டது.
இந்த நிலையில் ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்பகாக இந்தோனீசியாவின் பாலித் தீவுக்குச் சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அங்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி சந்திப்புடன் பாலியில் என்னுடைய நாள் தொடங்கியிருக்கிறது என்று திரு ஜெய்சங்கர் டுவிட்டரில் இது பற்றி குறிப்பிட்டிருந்தார்.
இருவருக்கும் இடையிலான சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்ததாகச் சொல்லப்படுகிறது.
முன்னதாக சீனாவுடன் எல்லைப் பூசல் உள்ளிட்ட எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்று அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்ததாக இந்திய வெளியுறவு அமைச்சு கூறியது.


