நீடிக்கும் கடும் வெப்பம்: டெல்லிக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை

1 mins read
49dbf56c-b741-4463-ab0a-8636ca8f0ae8
-

புதுடெல்லி: கடும் வெப்பம் நிலவுவதை அடுத்து, வானிலை ஆய்வு மையம் டெல்லிக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி உட்பட சில வடஇந்திய மாநிலங்களில் அடுத்த நான்கு நாள்களுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும் அம்மையம் முன்னறிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில், அதற்கு நேர்மாறாக வெயில் சுட்டெரித்து வருகிறது. கடும் வெப்பம் நிலவுவதை அடுத்து, இப்போது 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது.

அம்மாநிலங்களில் அடுத்த நான்கு நாள்களுக்கு, 44 முதல் 47 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தேவையற்ற காரணங்களுக்காக வெளியே செல்வதை அறவே தவிர்க்க வேண்டும் என்றும் டெல்லி வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

வடமாநிலங்களில் பருவமழை இன்னும் எங்கும் தொடங்கவில்லை என்பதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது.

டெல்லியில் இப்போதைக்கு பருவமழை தொடங்க வாய்ப்பில்லை என்றும் மேலும் சில நாள்கள் ஆகும் என்றும் வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இதற்கிடையே, வடகிழக்கு மாநிலங்களில் பருவமழை பொழிவு அதிகரிக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. அசாம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.