வருங்கால மருமகனுக்கு 365 வகை உணவு பரிமாறி அசத்திய பெண் வீட்டார்

1 mins read
923ee51e-364b-4ac5-9650-ba34d1ab6b2b
தடபுடலான விருந்துடன் புகைப்படத்திற்குக் காட்சியளிக்கும் குடும்பத்தார். படம்: ஏஎன்ஐ -

திருமணம் ஆகவுள்ள தம்முடைய பேத்திக்கும் அவருடைய வருங்கால கணவருக்கும் 365 வகையான உணவு வகைகளை சமைத்து, அப்பெண்ணின் தாத்தா பாட்டி திக்குமுக்காட வைத்த நிகழ்வு இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், கோதாவரியில் இடம்பெற்றது.

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நரசாபுரம் என்ற பகுதியை சேர்ந்த குந்தவி மற்றும் சாய் கிருஷ்ணா என்பவர்களுக்கு இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ள வேளையில், தம்முடைய பேத்திக்கும் அவருடைய வருங்கால கணவருக்கும் சங்கராந்தியை முன்னிட்டு பெண் வீட்டார் தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்தனர்.

அதன்படி, விதவிதமான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளைத் தயார் செய்யும் பெரும் பணி இடம்பெற்றது. 30 வகையான குழம்பு, சாதம், பிரியாணி, பாரம்பரிய கோதாவரி இனிப்புகள் மாப்பிள்ளைக்கு வழங்கப்பட்டன.

மேலும், 100 வகையான இனிப்புகள், 75 கார வகைகள், 15 ஐஸ்கிரீம் வகைகள் மற்றும் கேக்குகள் என மொத்தம் 365 வகையான உணவுகளை ஏற்பாடு செய்து பெண் வீட்டார் அசத்தினர்.

திருமண வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பே இந்தத் தடபுடல் விருந்தைக் கண்டு உள்ள குந்தவி-சாய் கிருஷ்ணா தம்பதி அசந்து போய்விட்டனர்.

இதுகுறித்து பெண் வீட்டார் கூறுகையில், "வருங்கால மருமகன்மீது எங்களது அன்பைக் காட்ட, ஓர் ஆண்டில் 365 நாள்களைக் கணக்கிட்டு அதற்கேற்ப 365 வகையான உணவுகளை ஏற்பாடு செய்தோம்," எனத் தெரிவித்தனர்.

இந்தத் தடபுடலான விருந்தைக் காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் பரவலாகி வருகின்றன.

-