துபாய்: ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் உள்ள இந்தியர்களுக்கு முன்பைவிட கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட, புதிய வடிவிலான கடப்பிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
அங்கு புதிய கடப்பிதழ் கோரி அல்லது புதுப்பிக்கக் கோரி விண்ணப்பம் செய்வோர்க்குப் புதிய வடிவமைப்பிலான கடப்பிதழ் வழங்கப்படும் என்று துபாயில் உள்ள இந்தியத் தூதரகம் கூறியதாக 'கல்ஃப் நியூஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பில் உள்ளவரை, 60 பக்கங்கள் அடங்கிய பழைய வடிவமைப்புடன் கூடிய கடப்பிதழும் வழங்கப்படும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
புதிய கடப்பிதழில் 'REPUBLIC OF INDIA' என்ற சொற்கள் முன்னட்டையின் மேற்பகுதியில் இடம்பெற்றிருக்கும். அதில், 'Reverse stitching' எனும் எதிர்த்திசை தையல் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
புதுவகைக் கடப்பிதழின் முதற்பக்கத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 36 பக்கங்களை மட்டும் கொண்ட புதிய கடப்பிதழின் எல்லாப் பக்கங்களிலும் கடப்பிதழ் எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஒளியியல் முறையில் விண்ணப்பதாரரின் புகைப்படம் கடப்பிதழில் அச்சிடப்பட்டிருக்கும். இது போலிக் கடப்பிதழ்களைத் தடுக்க உதவும் எனக் கூறப்படுகிறது.
கடப்பிதழ் பக்கங்களில் 'IND' என்ற சொல் அச்சிடப்பட்டிருக்கும். ஆயினும், எதிர்முகமாக உள்ள இரண்டு பக்கங்களைச் சேர்த்துப் பார்த்தால் மட்டுமே அது தெரியும்.
கடைசிப் பக்கத்தில் பெற்றோரின் பெயர்கள், வீட்டு முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அந்தப் பக்கம் இரட்டை 'லேமினேட்' செய்யப்பட்டிருக்கும்.
புதிய வடிவமைப்பால் விண்ணப்பச் செயல்முறையோ வழங்குவதற்கான காலமோ பாதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.

